லியோ வெற்றிக்கு திருப்பதியில் கோவிந்தா போட்ட லோகேஷ் கனகராஜ்.. ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரை
சென்னை: திருப்பதியில் இருந்து படியேறி பாதயாத்திரையாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. கோவிந்தா.. கோவிந்தா என்று முழக்கமிட்டவாரே லோகேஷ் கனகராஜ் பாதயாத்திரை சென்ற வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிச்சயம் என்பது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தினசரியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகின்றன. சாமான்ய மக்கள் முதல் மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஷாருக்கான், விஷால் வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படத்தின் வெற்றிக்காக பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார். விஜய்யின் 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.
'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முதல் சிங்கிள் ரிலீஸ் தொடங்கி ட்ரைலர் வரைக்குமே சர்ச்சைதான். ஆடியோ லாஞ்ச் நடைபெறவில்லை என்றாலும் அதைப்பற்றி ஒரு வாரத்திற்கு ஊடகங்களில் பேச வைத்தனர் படக்குழுவினர்.
'லியோ' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு நேற்று அனுமதி அளித்திருந்தது. அதன்படி, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அரசாணையில் 'தளபதி' விஜய் என குறிப்பிட்டப்பட்டிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

ஒருவழியாக படம் ரிலீஸ் ஆக உள்ளதால் படக்குழுவினர் ரிலாக்ஸ் ஆக இருக்கின்றனர். படத்தின் வெற்றிக்காக ஆன்மீக பயணமும் கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கைகளில் தடி கொடுக்கப்படுகிறது. லியோ படக்குழுவினரும் கைகளில் தடியோடு கோவிந்தா.. கோவிந்தா என்று முழக்கமிட்டவாரே பாதுகாப்புடன் நடந்து செல்கின்றனர். சிறுத்தை புலி வருவதனால் பாதுகாப்பாக அழைத்து செல்வதாகவும் பதிவிட்டுள்ளார் ரத்னகுமார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களின் இயக்குநரான ரத்ன குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' படங்களின் ஸ்கிரிப்டில் இணைந்திருக்கிறார் ரத்ன குமார்.












Click it and Unblock the Notifications