பொய் குற்றச்சாட்டு.. ஓபிஎஸ்க்கு காமாலை கண்.. பதிலடி தந்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு!
சென்னை : அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ். வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், முன்னாள் துணை முதலமைச்சர் இதனை காமாலை கண்ணோடு பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதற்கு முன்னதாக வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது அதில் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசுகையில்,

பழங்கள் விற்பனை
ஊரடங்கால் மக்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 5 ஆயிரம் தள்ளுவண்டிகள், 2 ஆயிரம் குட்டி யானைகள் (மினிவேன்கள்) மூலம் காய்கறி, பழம் விற்பனை செய்யப்படுகிறது.

கண்காணிப்பு
மேலும் வியாபாரிகள் இதுபோன்று விற்பனை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். கொரோனா காலத்தில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்தோடு குறைந்த விலையில் காய்கறி உள்ளிட்டவை கிடைக்க இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது., அதிக விலைக்கு விற்பனை செய்யாத வண்ணம் கண்காணிப்பு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை எழுப்பூர் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் வீடு செல்ல முடியாமல் தவித்த போது, மாநகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்

அமைச்சர் விளக்கம்
மேலும் அமைச்சர் சேகர் பாபு பேசும் போது, அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டி உள்ளார். ஆனால் அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின், மறறும் மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். முன்னாள் துணை முதலமைச்சர் இதனை காமாலை கண்ணோடு பார்க்கிறார் என குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications