"பண பலன்" கிடைக்கவில்லை.. ஆசிரியர் வழக்கு..பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப் பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்களை வழங்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில், மனுதாரர்களுக்கு பண பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், வெவ்வேறு அமர்வுகள், வெப்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, 1993-ம் ஆண்டின் அரசாணையை அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்றும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு பணப் பலன்கள் கோரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது, நீதிபதி பரேஷ் உபாத்யாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, "2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என முழு அமர்வு உத்தரவிட்டதால், நிவாரணம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2013-ம் ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால், எப்போது நிவாரணம் வழங்கப்படும் என விளக்கமளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணப் பலன்கள் வழங்குவது தொடர்பாக அரசின் கருத்துக்களை கேட்டு தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஆனால், அரசுத்தரப்பில் உரிய விளக்கம் வழங்கப்படாததால், விசாரணைக்கு அரசுத் தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, நாளை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications