ஃபர்ஸ்ட் டைம்.. மேஜர் அறிவிப்பு! கிராமசபை போல நகரசபை.. பம்மல் பகுதியில் மக்களை சந்திக்கும் முதல்வர்!
சென்னை : கிராமசபை கூட்டங்கள் போல தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நிலையில், நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் இந்தக் கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் நடைபெறும் மாநகரசபை 6வது வார்டு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிராம சபை கூட்டங்கள்
கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் உள்ளிட்ட நாட்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்ற பிறகு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும், ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

நவம்பர் 1
வரும் நவம்பர் 1ஆம் தேதி மாநிலம் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில், அந்தந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்தப்படும். மேலும் கொண்டு வர வேண்டிய திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நகரசபை - மாநகரசபை
இந்நிலையில், கிராம சபை கூட்டம் நடைபெறுவதைப் போன்று தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் இந்த கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பம்மல் பகுதியில் ஸ்டாலின்
இதில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் 6வது வார்டில் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பம்மல் பகுதியில் அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள்
கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். அந்த முறையே நகரசபை, மாநகரசபை கூட்டங்களிலும் பின்பற்றப்பட இருக்கிறது. கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தது போல நகர சபை கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications