சமமான வளர்ச்சி பெற.. இந்தியா என்ற உணர்வுடன் தேசியளவில் சிந்திக்க வேண்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி மீதே கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22 வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாட்டின் ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இணை வேந்தரும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "சர்வதேச அளவில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 2047 ஆம் ஆண்டிற்குள் ஆன்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியா முன்னணி பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களான உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி, குடிநீர், மின்சாரம் போன்றவை அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கவில்லை. இதனாலே சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் நாட்டில் ஏராளமான ஏழைகள், வீடற்றவர்கள், நோயாளிகள் மற்றும் கல்வியறிவில்லாத மக்கள் உள்ளார்கள். இதனால் பிராந்திய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் மோதல் போக்குகளும் ஏற்படுகின்றன. ஒரு நாடு இப்படி வளரக்கூடாது. இப்படியே இருந்தால் இந்தியா அதன் முழு திறனை அடையாது.
அனைத்து அடிப்படை தேவைகளும், சேவைகளும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பாரபட்சமின்றி சமமாக கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயன்று வருகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர், ஒவ்வொரு ஏழை மற்றும் விளிம்புநிலை விவசாயிக்கு தேவையான வீடு, மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு போன்றவை விரைவாக கிடைத்தால் நம் நாடு முன்னேற்றமடையும்.
சூழலியல் சமத்துவத்திற்கு மற்ற உயிரினங்களின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம். 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்யவும், 2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வற்ற நிலையை உருவாக்கிடவும் இந்தியா இலக்கை நிர்ணயம் செய்து இருக்கிறது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 400 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் 10 ஆயிரமாக அதிகரித்து உள்ளன.
நாம் அனைவரும் தேசிய அளவிலான பார்வையை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 282 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் பிவிஎஸ்சி படிப்பில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் ஆர்.சங்கருக்கு 26 பதக்கங்களையும் 2 விருதுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி கவுரவித்தார். திருப்பூரை சேர்ந்த மாணவர் ஆர்.சங்கரின் பெற்றோர் ப னியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
