சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!
சென்னை : 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவுக்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெல்லை கண்ணன் இன்று காலமானார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது வீட்டில் இருந்தபோது காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை கண்ணனின் மறைவு தமிழ் இலக்கிய உலகையும், அவரது ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ஆசை நிறைவேறவே இல்லை.. நெல்லை கண்ணனின் உருக்கமான பதிவு.. பிளாஷ்பேக்!

நெல்லை கண்ணன் மறைவு
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் (77) இன்று காலமானார். திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன் 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்ட நெல்லை கண்ணன், காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து உருக்கம்
நெல்லை கண்ணன் மறைவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசியுள்ள கவிஞர் வைரமுத்து, தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தில் இருந்தவர் நெல்லை கண்ணன். கம்பன், கண்ணதாசன், பாரதி என அனைவர் பற்றியும் அருவி போல உரையாற்றுவார். பாற்கடல் போல் தமிழில் பொங்குபவர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன். அவரது நகைச்சுவை அற்புதமானது. அவரது நகைச்சுவையை தவறாகச் சிலர் புரிந்துகொண்டதால் அவருக்கு நேர்ந்த விளைவுகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

தமிழ்க்கடல் வற்றிவிட்டது
அது குறித்து கவலையுறாமல், தன் வாழ்வை மாற்றிக்கொள்ளாமல் கடைசி வரை தமிழ்த்தொண்டு செய்தவர் நெல்லை கண்ணன். நம் சமகாலத்தின் தமிழ்க்கடல் வற்றிவிட்டது என்றே கருதுகிறேன். சமூகத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டிக்கொண்டே இருந்தவர் நெல்லை கண்ணன். அவரோடு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட அவரது சொல்வண்மையை மறுத்ததில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு பேரிடி
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நெல்லை கண்ணன் மறைவு குறித்து, "இந்தச் செய்தி தமிழர்களுக்கு பேரிடியாகத்தான் வருந்தச் செய்கிறது. ஆரம்ப காலத்தில் நான் மேடைகளில் பேசத் தொடங்கியபோது நெல்லை கண்ணன் அண்ணாச்சி போன்றோர் இருந்த மேடைகளில் பேசும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். அவர் நடுவராக இருந்தபோது, அணியில் இருந்து பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நானும் அவரும் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் அரிய செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

கு.ஞானசம்பந்தன்
நெல்லை கண்ணனின் மேற்கோள்கள் கிளை கிளையாக பிரிந்து வரும். 40 ஆண்டுகளுக்கு முன்பாக நான் திருச்சி வானொலி கேட்டுக் கொண்டிருந்தபோது யார் பேசுகிறார் என்றே தெரியாமல் பேச்சை ஒரு மணி நேரம் கேட்டேன். அவர் பெயரை முதன் முதலில் கேட்டபோதே நான் அவரது ரசிகர் ஆனேன். அவரை இழுந்து வாடும் அனைவரும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா
பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா பேசுகையில், "நல்ல தமிழில் ஆழமான ஈடுபாடு கொண்ட மனிதர் நெல்லை கண்ணன். தென் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திற்கே உரிய பல்வேறு நற்குணங்களைக் கொண்டவர் நெல்லை கண்ணன். கம்பராமாணயத்தில் அவர் தொடுகிற இடங்கள் எல்லாம் அழுத்தமானதாக இருக்கும்.

தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு
பட்டம் பெறவில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், பல பட்டதாரிகளைவிட, அதிகமான ஞானம் அவருக்கு தமிழில் இருந்தது. தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஆழம் இருந்தது. மேடைகளில் பேசத் தொடங்கினால், மணிக்கணக்கில் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர். காமராஜரை மிக மிக நேசித்தவர். பலரிடமும் நட்பு கொண்டவராக வாழ்ந்தார். அவரது இழப்பு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு. இனிமேல் இத்தகைய மனிதரைக் காண்பது அரிதானது" எனத் தெரிவித்துள்ளார்.