வேலையை காட்டிய ஆம்னி பேருந்துகள்.. ஜன.1ல் மதுரை - சென்னை திரும்ப ரூ.3,000.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை: புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜன.1ம் தேதியன்று மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஆம்னி பேருந்து கட்டணமாக ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், பண்டிகைக்கு முந்தைய நாட்களில் சென்னையில் இருந்து பெரும் கூட்டமே தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும். இதனால், பேருந்து, ரயில்கள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதும்.
அந்த வகையில் டிசம்பர் 24ம் தேதி முதல் சென்னையில் இருந்து ஏராளமானோர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர் பயணம் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் புத்தாண்டும் வருவதால், மக்கள் ஏராளமானோர் சொந்த ஊரிலேயே தங்கி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

விடுமுறை நாட்கள்
அதற்கேற்ப குழந்தைகளுக்கும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனவரி 1ம் தேதிக்கு பின் மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

விருப்பம் போல் கட்டணம் உயர்வு
பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டன. ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது.

மதுரை - சென்னை
ஜனவரி 1ம் தேதி இரவு மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ. 2,700 முதல் ரூ.3,000 வரை கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண நாட்களில் மதுரை - சென்னை வருவதற்கு ரூ. 700 முதல் ரூ.1,000 வரை மட்டுமே கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. இதேபோல் கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1,100 முதல் ரூ.1,300 வரை வழக்கமாக கட்டணம் பெறப்படும். ஆனால் ஜன.1ம் தேதி ரூ.3,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

3 மடங்கு உயர்வு
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ரூ.2,400 முதல் ரூ.2,700 வரை மட்டுமே வழக்கமான கட்டணமாக வாங்கப்படும். ஆனால் ஜன.1ல் ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் விமான பயணத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications