விடாப்பிடி.. “முடியுமா.. நடக்குமா..?” எடப்பாடியை கால் வைக்க விடாத ஓபிஎஸ்.. கொண்டாடும் ஆதரவாளர்கள்!
சென்னை : தேவர் தங்கக் கவசத்தைப் பொறுத்தவரை, அதிமுகவில் தன்னைத் தவிர யாரும் தொட முடியாது என விடாப்பிடியாக நின்று காட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் எனக் கொண்டாடுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
2014ஆம் ஆண்டு முதல் தேவர் குருபூஜைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸே வங்கியில் இருந்து தங்கக் கவசத்தை பெற்று தேவர் குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைத்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, ஓபிஎஸ் - தினகரன் இடையேயான போட்டியில், மாவட்ட ஆட்சியர்கள் வசம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, அதிமுக பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனை வைத்து தங்க கவசத்தை பெற முயற்சித்தார் ஈபிஎஸ். ஆனாலும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ஈபிஎஸ் கணக்குகள் தோல்வி
ஓ.பன்னீர்செல்வத்திற்கு குடைச்சல் கொடுக்க எடப்பாடி பழனிசாமி போடும் கணக்குகள் வரிசையாக தோல்வியைத் தழுவி வருகின்றன. தென் மாவட்டங்களில் பெரும் வாக்கு வங்கியாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தவரின் ஆதரவை தன் பக்கம் திருப்ப, தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற்று, அணிவிக்க முயன்றது ஈபிஎஸ் தரப்பு. ஆனால், அந்த முயற்சியும் பலிக்காமல் போயுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாமல் தவிர்த்துள்ளார். இதையே தங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.

அதிமுக வழக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவைப் பெற்றார் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின்போது, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கியில் கையெழுத்திட்டு, தங்கக்கவசம் பெறுவதும், பின்னர் குருபூஜை முடிந்ததும் அதை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பதும் வழக்கம்.

யாருக்கு உரிமை?
தற்போது அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை மோதலால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்த முறை தேவர் குருபூஜையின்போது தங்க கவசத்தை பெற்று தேவர் சிலைக்கு அணிவிக்க போவது யார் என்கிற குழப்பம் ஏற்பட்டது. அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக ஈபிஎஸ் நியமித்ததால் தங்கக் கவசத்துக்கு உரிமை கோரி திண்டுக்கல் சீனிவாசன் வங்கி நிர்வாகத்திடம் அளித்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பினரும் வங்கி நிர்வாகத்தில் மனு அளித்தனர்.

ஓபிஎஸ் vs ஈபிஎஸ்
வங்கி நிர்வாகம் முடிவெடுக்காத நிலையில், தங்கக் கவசத்துக்கு உரிமை வழங்க கோரி ஈபிஎஸ் தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதிமுக பொருளாளர் என்ற முறையில் அனைத்து வங்கி கணக்குகளின் வரவு செலவுகளையும் பார்த்து வரும் திண்டுக்கல் சீனிவாசனிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். ஓபிஎஸ் தரப்பில், அதிமுக நியமனம் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஈபிஎஸ் தரப்புக்கு தங்கக் கவசத்தை கொடுக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

டி.ஆர்.ஓ கைகளில்
தேவர் தங்கக்கவசம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்படுமா? ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது மாவட்ட ஆட்சியரிடம் வசம் ஒப்படைக்கப்படுமா? என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவர் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை வங்கியில் இருந்து மதுரை, ராமநாதபுரம் டி.ஆர்.ஓக்களிடம் தங்கக் கவசம் வழங்கப்பட்டு, அதை அவர்கள் பசும்பொன்னிற்கு கொண்டு சென்று அளித்துள்ளனர்.

முடிவை மாற்றிய ஈபிஎஸ்
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே, எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. கட்சியில் பெருவாரியான ஆதரவு தன் பக்கமே இருந்தாலும் தேவர் தங்கக் கவசத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கி, தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்லும் முடிவைக் கைவிட்டார்.

ஓபிஎஸ் வெற்றி?
தேவர் தங்கக் கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் பெறாவிட்டாலும் கூட, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு செல்லவிடாமல் தடுத்ததையே தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பதை வங்கிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட, தேவர் தங்கக் கவச விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை தாழ்ந்துள்ளது அவருக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அன்றும் இன்றும்!
ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர்களை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரு தரப்பினருக்கும் தேவர் தங்கக் கவசம் வழங்கப்படவில்லை. மதுரை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள்தான் தங்க கவசத்தைப் பெற்று தேவர் குருபூஜை முடிந்ததும் மீண்டும் வங்கியில் ஒப்படைத்தனர்.

ஓபிஎஸ் ராஜ்ஜியம்
அந்தவகையில் பார்த்தால், அதிமுக சார்பாக தங்கக் கவசம் வழங்கப்பட்டது முதல் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வங்கியில் இருந்து தங்கக் கவசத்தைப் பெற்று வந்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு மற்றும் தற்போது நிலவிய குழப்பச் சூழ்நிலைகளில், எதிர் தரப்புகளால் தங்கக் கவசத்தைப் பெற முடியவில்லை. அதிமுக சார்பாக தேவர் தங்கக் கவசம் இதுவரை ஓபிஎஸ் கைகளில் மட்டுமே கிடைத்து வந்திருப்பதை சுட்டிக்காட்டி உற்சாகமாகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

தொட முடியலையே
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோருக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து, மாஜிக்கள் படையையே பசும்பொன்னில் இறக்கினாலும், ஓபிஎஸ்ஸை மீறி தேவர் தங்கக் கவசத்தை எடப்பாடி பழனிசாமியால் தொட முடியவில்லை. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுகவின் முகம் எப்போதுமே ஓபிஎஸ் தான் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது எனக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications