''இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரே தவறானது''! பரபரப்பை கிளப்பும் பழ.கருப்பையா!
இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றச் சொல்லும் பழ.கருப்பையா.
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரே தவறானது என்றும் தமிழ் சமய அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் பழ.கருப்பையா.
தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நேற்று தொடங்கியுள்ள அவர் நாளை சென்னையில் மாநாடு நடத்துகிறார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, இந்துதுவாவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என வினவியதோடு பிறகு ஏன் இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்ற தயக்கம் என கேள்வி எழுப்பினார்.

பழ.கருப்பையா
காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சென்று வந்த பழ.கருப்பையா, இப்போது சொந்தமாக புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள கட்சியின் முதல் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனக் கூறியுள்ள பழ.கருப்பையா தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 4,000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

பெயரை மாற்ற வேண்டும்
மேலும், 10,000 பேர் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தில் இணைந்து செயலாற்ற காத்திருப்பதாக கூறிய அவர், இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரே தவறானது என பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்துதுவாவுக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயர் எதற்கு இருக்க வேண்டும் என வினவிய அவர், அதனை தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மதம் கிடையாதா?
இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து தாம் எடுத்துக் கூறியதையும் சுட்டிக்காட்டினார். வள்ளலாருக்கு இந்து என்ற சொல் தெரியாது எனக் கூறிய பழ.கருப்பையா, வேதத்துக்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு பண்பாடு உண்டு, இனம் உண்டு, நாகரீகம் உண்டு, மொழி உண்டு என்கிற போது மதம் மட்டும் கிடையாதா என பழ.கருப்பையா கேள்வி எழுப்பினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்
நீதிக்கட்சி ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை என தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கருப்பையா விமர்சித்தார். கட்சி ஆரம்பித்த அன்றே பரபரப்பான கருத்துக்களால் கவனம் ஈர்த்திருக்கிறார் தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்பையா.












Click it and Unblock the Notifications