மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்... மாறி மாறி குற்றம் சொன்னால் போதுமா?- நிரந்தர தீர்வுதான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்குப் பருவமழை வந்தாலே பலரது வயிற்றில் பய அமிலம் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. காரணம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்குமே உணவுக்கும் தண்ணீருக்கும் கூட தவிக்க வேண்டியிருக்குமே என்பதுதான் சென்னையிலும் புறநகரிலும் வசிக்கும் பெரும்பாலான மக்களின் கவலை. சரியான மழைநீர் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தால் மேற்கு மாம்பலம், தியாகராயநகரில் வசிக்கும் மக்களும் கூட இந்த ஆண்டு வெள்ளத்தில் நீந்தி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Recommended Video

    இப்படி இருந்தா ஏன் வெள்ளம் வராது? இணையத்தில் வைரலாகும் Velacheri Lake-ன் Map

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கினாலும் நவம்பர் மாதத்தில்தான் தீவிரமடைந்தது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஒரு கன மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. மக்கள் படகுகளில் பயணிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, புறநகர் பகுதிகள் என சென்னை பெருநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தத்தளிக்கும் சென்னை

    தத்தளிக்கும் சென்னை

    தி.நகர், கே.கே நகர் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் ,சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளும் எட்டிப்பார்க்கின்றன. நவம்பர் 7ஆம் தேதி ஒரே ஒருநாள் விடிய விடிய கொட்டிய மழைதான் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டு விட்டது.

    படகு போக்குவரத்து

    படகு போக்குவரத்து

    ஒருநாள் கன மழை பெய்துவிட்டாலே சென்னையில் படகில் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வடிகால் முறையாக இல்லாததால் என்கிறார்கள் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள். பல மாதங்கள் வெள்ள நீரில்தான் தவிக்கிறோம் யாரும் வந்து கேட்கவில்லை என்பதே வெள்ளத்தில் தவிக்கும் மக்களின் வேதனை.

    தவிக்கும் மக்கள்

    தவிக்கும் மக்கள்

    சென்னையில் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் ,சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்கட்சியாக இருந்தாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பால், ரொட்டி, போர்வை, துண்டு போன்ற நிவாரணப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. நிரந்தரமான தீர்வு எதுவும் எடுக்கவில்லை என்பதே பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது ஆள்பவர்களோ, கடந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்று கடந்த ஆட்சியாளர்களின் மீது பழியை போட்டு விட்டனர்.

    பணம் என்னவானது

    பணம் என்னவானது

    மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதல்வர் அய்யா என்று சொல்லியிருந்தர் இயக்குநர் சேரன். தண்ணீரை வெளியேற்றும் வழி அறிந்திருந்தால், மக்களை வெளியேற்றும் நிலை வந்திருக்காது. சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்சியில் இருந்தவர்கள் கோட்டை விட்டு விட்டு இப்போது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெள்ள நீரில் இறங்கி இப்போது ஆள்பவர்களை குற்றம் சொல்கின்றனர்.

    2015 வெள்ளம்

    2015 வெள்ளம்

    கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருமழையும் அதனால் வெள்ளமும் ஏற்பட்டு பலநூறு உயிர்கள் பறிபோனது. பல லட்சக்கணக்கான மக்களின் உடமைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. நூற்றாண்டுகளில் பெய்யாத மழையே இந்த பெருவெள்ளத்திற்குக் காரணம் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க தற்காலிக தீர்வுதான் காணப்பட்டது.

    தவிக்கும் மக்கள்

    தவிக்கும் மக்கள்

    2016 முதல் 2021ஆம் ஆண்டுவரைக்கும் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தியிருந்தால் இப்போது வெள்ளத்தில் கால் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தைரியமாக எங்கள் ஆட்சி காலத்தில் இதெல்லாம் செய்திருக்கிறோம் என்று கூறி மக்கள் முன்பு நின்றிருக்கலாம். யாரையும் உணவுக்காக கையேந்த வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    ஏரிகள் சூழ்ந்த சாலைகள்

    ஏரிகள் சூழ்ந்த சாலைகள்

    சென்னையில் பல ஏரிகள் காணாமல் போனதும் வெள்ளத்திற்கு காரணமாக இருக்கிறது. பெருநகராட்சி என்ற சொல்லப்படுகிற இன்றைய சென்னை முந்தைய காலத்தில் ஏரிகளாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்தன. நகரமயமாக்கம் போது வடிகால்கள் முறையாக அமைக்கப்பட்டு அதற்கு வழிவிட்டு அமைய வேண்டும். ஆனால் அப்படி அமையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சாலையின் விரிவாக்கத்திற்காக வடிகாலை சுருக்கி இருக்கிறார்கள். தண்ணீர் செல்லும் அளவிற்கு வடிகால்கள் இல்லை. அயனாபுரம் ஏரி, பெரம்பூர் சித்தேரி ஏரி, மேடவாக்கம் ஏரி போன்றவை காணாமல் போயிருக்கின்றன. அந்த ஏரிகளில் தங்க வேண்டிய தண்ணீர்தான் அங்கே தங்க வழியில்லாமல் ஒட்டுமொத்த சென்னையையும் ஏரியாக மாற்றியிருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.

    ஸ்மார்ட் சிட்டி ஊழல்

    ஸ்மார்ட் சிட்டி ஊழல்

    சென்னை தியாகராயநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெறப்பட்டுள்ளது என்று இப்போது முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது?. தியாகராய நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்றும் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

    நீதிமன்றம் குட்டு

    நீதிமன்றம் குட்டு

    நீதிமன்றமும் கடந்த கால ஆட்சியாளர்களின் தலையில் குட்டியுள்ளது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    நிரந்தர தீர்வு தேவை

    நிரந்தர தீர்வு தேவை

    சென்னைவாசிகள் பாதி நாள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கின்றனர். மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். சரியான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சென்னைவாசிகள் மழைகாலங்களில் தண்ணீரில் தத்தளிக்காமல் தப்பிக்க முடியும். மாறி மாறி குற்றச்சாட்டு வைக்காமல் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகவும் உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+