சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர்! பின் அரசு பள்ளியில் உலக தர கல்வி எப்படி வரும்? அன்புமணி ராமதாஸ் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை டூ கன்னியாகுமரி! 'அன்புடன் அன்புமணி’.. பாமகவின் பக்கா பிளான்! கிராமம் கிராமமாக செல்ல முடிவு! சென்னை டூ கன்னியாகுமரி! 'அன்புடன் அன்புமணி’.. பாமகவின் பக்கா பிளான்! கிராமம் கிராமமாக செல்ல முடிவு!

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

 ஆசிரியர்கள் பற்றாக்குறை

ஆசிரியர்கள் பற்றாக்குறை

தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும். இத்தகைய பள்ளிகளின் மாணவர்களால் கடினமான மேல்நிலை மற்றும் உயர்கல்வியையும், போட்டித் தேர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

 இடைநிலை ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 4,863 ஆசிரியர் பணியிடங்கள் கடந்த ஆண்டு நிலவரப்படி காலியாக உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தொடக்கப் பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக 4,500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் கூடுதலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த வகையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வளவு ஆசிரியர்களை நியமித்தால் கூட அரசு அனுமதித்த பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள்.

 எப்படி முடியும்

எப்படி முடியும்

அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது மட்டும் தான் அரசின் நோக்கமாகவும், இலக்காகவும் இருக்கிறதே தவிர, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படைத் தேவையை நிறைவேற்ற அரசு முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக பாடத்திட்டங்களும், பாட நூல்களும் உள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். இதைக் கூட செய்யாமல் 5 வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர், மூன்று வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவோம் என்பதெல்லாம் பயனற்ற முழக்கமாகவே இருக்கும். ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கும்.

 வடமாவட்டங்கள்

வடமாவட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. இவை அனைத்தையும் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை, அண்மையில் வெளியிட்ட ஆவணத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் வாழும் வட மாவட்டங்களில் மட்டும் தரமான கல்வி மறுக்கப்படுவது ஏன்? வகுப்புக்கு ஓர் ஆசிரியரைக் கூட நியமிக்காமல் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதனால் பயன் ஏற்படாது.

 நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதை ஈராண்டு திட்டமாக செயல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK chief Anbumani Ramadoss about inadequate teachers in govt schools: (தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்து கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்) Anbumani Ramadoss slams DMK over govt schools in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X