11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் குறைப்பு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.
சென்னை: தமிழகம் முழுவதும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.

இந்த நிலையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரையும் ஏப்ரல் 28 முதல் மே 2ஆம் தேதி வரை இரு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக பள்ளிகளில் ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட முதன்மை தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வுவில் பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதீப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications