பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர இதை செய்ய ரெடியா? மத்திய அரசுக்கு பிடிஆர் வைத்த செக்
சென்னை: செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவர சம்மதம் தெரிவிக்க ரெடி என்று, மாநில நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை கொண்டுவர மாநில அரசுகள் சம்மதிக்காதது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அப்போது அவர் அளித்த பதிலில் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாடு
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டி இதோ: இந்தியா போன்ற நாட்டில்தான் மத்திய அரசு அதிகாரத்திற்குள் நேரடி வரி விதிப்பு முழுக்க முழுக்க இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட அளவு, மறைமுக வரி, மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி போன்றவை, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், நகர நிர்வாகங்களுக்கு கூட அதிக அதிகாரம் உள்ளது.

மாநில நிதி குறைந்து விட்டது
இப்போது, மாநில அரசின் கையில் இருக்கும் வரி விதிப்பு சார்ந்த இரண்டு பெரிய அதிகாரங்கள், மது விற்பனைக்கு விதிக்கப்படும் வரி மற்றும் பெட்ரோல், டீசல் பொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் மட்டும்தான். இதனால் இயற்கையாகவே மாநிலங்கள் தங்களிடம் இருக்கும், இந்த வரி சார்ந்த எஞ்சியுள்ள அதிகாரங்களையும் விட்டுக் கொடுக்க ரெடியாக இல்லை. ஏனென்றால் இதிலும் ஒரு பெரும் பாகம், டெல்லி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வரி விதிப்பு கட்டமைப்பு
ஒரு சிலர் ஜிஎஸ்டி எல்லோருக்குமான அமைப்பு என்கிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கானது என்பதுதான் உண்மை. கடந்த 7 வருடங்களில் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு, ஐந்திலிருந்து, 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கு பகிரப்படும், கலால் வரி விகிதம் மற்றும் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளக் கூடிய செஸ் மற்றும் கூடுதல் கட்டணமாக 90 சதவீதம் கலால் வரியிலிருந்து, 4 சதவீதம் கலால் வரியாக மாறி இருக்கிறது. மத்திய அரசின் 96 சதவீதம் வரி விதிப்பு, கூடுதல் கட்டணமாக உள்ளது. எனவே, நான் ஏற்கனவே கூறியதைப் போல, மத்திய அரசு, செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை அகற்றினால், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்வோம்.

திமுக அரசு குறைத்துள்ளது
ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் இது வழக்காக தொடரப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதை பரிசீலிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியது. அதற்கேற்ப ஜிஎஸ்டி கவுன்சில் விவாதித்துள்ளது. அதற்கான பதில் வழங்கப்பட்டுள்ளது. இப்போதே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியும். அதிமுக அரசு வரியை குறைத்தது இல்லை. ஆனால் திமுக அரசு குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு செல்லப்பட்டால், இந்த விஷயத்தில் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கூட்டம் தொடர்பாக விமர்சனம்
ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எனவேதான் பெட்ரோல், டீசல் விலை குறையப்போவதில்லை எனவும் பாஜக ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், பல வரி வருமானங்களை மத்திய அரசு எடுத்துக்கொண்ட நிலையில், இருக்கும் சில வரிகளையும் பறிப்பது மாநில சுயாட்சியை முடக்கிவிடும் என்பது தமிழக நிதித்துறை அமைச்சர் விளக்கமாக உள்ளது. செஸ் வரியை நீக்க வேண்டும் என்ற நிதியமைச்சர் கோரிக்கைக்கு மத்திய அரசு என்ன பதில் கூறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications