"அரே பையா".. தமிழ்நாடு எம்பிக்களை நிர்மலா சீதாராமன் குறி வைப்பது ஏன்? பிடிஆர் தந்த பரபர விளக்கம்
சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு எம்பிக்களை குறி வைத்து பேசுவது ஏன் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகவும், விலைவாசி உயர்வு தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய தமிழ்நாடு எம்பிகளுக்கு சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழிலேயே பதில் அளித்தார். திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக தமிழில் பதில் சொன்னார்.
அதானி குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் கோபமாக விளக்கம் கொடுத்தார். அரே பையா என்று பேச தொடங்கி பின் தமிழுக்கு மாறிய நிர்மலா சீதாராமன்... திமுக அரசு அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருக்கிறதே. நீங்கள் ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை, ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு எடுக்கும் முடிவு அல்ல அது கவுன்சில் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவு, சிலிண்டருக்கு நீங்கள் மானியம் கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
பொய்களை கட்டவிழ்க்கும் திமுக எம்பிக்கள்.. உண்மைக்கு புறம்பாக பேசும் பிடிஆர்.. அண்ணாமலை ஆக்ரோஷம்

பிடிஆர் கேள்வி
நிர்மலா சீதாராமன் இப்படி நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விலைவாசி உயர்விற்கு பதில் அளிக்காத நிர்மலா சீதாராமன் உரையை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு எம்பிக்களை குறி வைத்து பேசுவது ஏன் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கி உள்ளார். இது தொடர்பாக பிடிஆர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

விளக்கம்
தமிழ்நாடுதான் மாநில உரிமைகளை பேசும் கடைசி கோட்டை என்று சொல்ல முடியும். அதேபோல் நல்ல பொருளாதார நிலை கொண்ட மாநிலமாக உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பாஜக நேரடியாக வென்றும், பின் பக்கம் வழியாக ஆட்சியை கவிழ்த்தும் ஆட்சியை பிடித்து உள்ளது. வெகு சில மாநிலங்கள் மட்டுமே பாஜக அல்லாத ஆட்சியை கொண்டு மாநில உரிமைகளை பேசி வருகிறது.

பொருளாதாரம்
அந்த சில மாநிலங்களில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கிறது. சில உதாரணங்களை சொல்கிறேன்.. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்த வருடம் நிதிப்பற்றாக்குறை 7 சதவிகிதம் இருந்தது. தமிழ்நாடு அரசுடையது 3.5 வரைதான். பணவீக்கம் தேசிய அளவில் 8 சதவிகிதம். எங்களுடையது 5 சதவிகிதம்தான். எந்த வகையில் பார்த்தாலும்.. அவர்கள் ஜிஎஸ்டி வருவாய் 20-30 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கூறுவார்கள்.

என்ன காரணம்?
ஆனால் தமிழ்நாடு அரசின் வருவாய் அதை விட அதிகமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சமூக ரீதியை கொண்ட பொருளாதார வளர்ச்சி மீது கவனம் செலுத்தும் அரசு செயல்பட்டு வருகிறது. காலனிய ஆதிக்க மனோபாவத்தில் செயல்படும் ஒன்றை அரசை இது உறுத்துகிறது. காலனிய ஆதிக்க மனோபாவத்தில் செயல்படும் ஒன்றை அரசு தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். தங்களிடம் எல்லாம் இருக்க வேண்டும். தங்களிடம் பவர் இருக்க வேண்டும்.

தலையாட்டி பொம்மை
மாநில அரசுகள் தலையை ஆட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு வேறு வழியில் செல்கிறது. அவர்களை விட சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதை தமிழ்நாடு அரசு காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் தமிழ்நாட்டை டார்கெட் செய்கிறார்கள். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது வைத்த அதே கோரிக்கைகளைத்தான் நாங்கள் இப்போது வைக்கிறோம். மாநில உரிமைக்காக பேசியவர் அவர்தான்.
Recommended Video

மாநில உரிமை
இப்போது அவரே மாநில உரிமைக்கு எதிராக இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை. மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியாது. அரசியலமைப்பு சட்டம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் இதில் முஷ்டி முறுக்கி அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஒன்றிய அரசு நினைக்கிறது. மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் தொகையும் கூட குறைந்து வருகிறது. இதை எதிர்ப்பர்வர்களை அவர்கள் விரும்புவது இல்லை. தமிழ்நாட்டை அவர்கள் எதிர்க்க இதைவிட வேறு சிறந்த காரணம் இல்லை, என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.