• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பணமூட்டைகளுக்கு மத்தியில்.. எழுச்சி பெற்றது சாதாரணமல்ல.. தமிழ் உறவுகளுக்கு நன்றி.. சீமான் பெருமிதம்

|

சென்னை: எங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு செயல்படுவோம் என்று சீமான் தெரிவித்தார்.

புதிதாக அமைய இருக்கிற தமிழக அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும், பினராயி விஜயனுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் சீமான் கூறினார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா ஆதிக்கம்.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. இதுதான் புதிய அட்டவணை!இந்தியாவில் கொரோனா ஆதிக்கம்.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. இதுதான் புதிய அட்டவணை!

அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பு

நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழர் நிலத்தின் தனித்துவமான மாபெரும் அரசியல் அமைப்பாக மாறியிருப்பது வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த செய்தியாகும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.1 வாக்கு விழுக்காடு அடைந்தது. கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 16,45,185 வாக்குகளைப் பெற்று ஏறத்தாழ 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

மூன்றாவது பேரியக்கம்

மூன்றாவது பேரியக்கம்

நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 30,41,974 வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அரசியல் பேரியக்கமாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.கடந்த 11 ஆண்டுகளில் தமிழக அரசியல் பரப்பில் நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தியிருக்கிற அதிர்வுகள் சாதாரணமானவையல்ல. கடந்த 2009 ஆம் ஆண்டுத் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழத்தில் நடைபெற்ற இன அழிவினைக் கண்டு கொதித்தெழுந்த தமிழின இளையோர் 2010 மே 18 ல் மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தை ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக மாற்றினோம்.

அதிர வைத்தோம்

அதிர வைத்தோம்

தொடர்ச்சியாகப் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், அரசு அதிகாரத்தின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், பொய்மையும் வன்மம் நிறைந்த அவதூற்றல்களுக்கு இடையிலும் மொழியை, இனத்தினை உயிருக்கு மேலாக நேசிக்கும் இளைஞர்களை உள்ளடக்கியப் பெரும் படையாகக் கட்டி எழுப்பினோம்.பொய்ப்புளுகுகளால், வசன அடுக்குகளால் புரையோடிப்போன தமிழக அரசியல் பரப்பை, கொள்கை சமரசமின்றி உயிர்ப்போடு போராடிய எங்களது போராட்டங்களால் அதிரவைத்தோம். சாதி-மத உணர்ச்சியைச் சாகடித்து 'நாம் தமிழர்' என்ற உணர்வோடு ஊருக்கு ஊர் திரண்ட இளைஞர் கூட்டம் இந்த மண்ணிற்காகத் தூய அரசியலை கட்டியெழுப்பியபோது அதனைத் தகர்க்க, கடும் உழைப்பினால் விளைந்த எங்களது முயற்சிகளை முறியடிக்க எங்களைக் குறித்துத் தொடர்ச்சியான பல பொய்யான பரப்புரைகள் நடைபெற்றன.

சுற்றுச்சூழல் பாசறை

சுற்றுச்சூழல் பாசறை

ஆனாலும், நாங்கள் மக்களையே நம்பி நின்றோம். உழைப்பினை மிஞ்சியது எதுவும் இல்லை என்று உணர்ந்து உழைத்தோம். எங்கெங்கெல்லாம் எம் மண்ணின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் விரைந்து சென்று போராட்டக்களங்களில் முன்நின்றோம். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது போர்க்குரல் எழுப்பி வீதிகளில் நின்று முழங்கித் தீர்த்தோம்.வெறும் அரசியல் கட்சியாக மட்டுமில்லாமல், இந்திய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாகச் சுற்றுச்சூழல் பாசறை, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மாற்று அரசியலுக்கான பல முயற்சிகளை முன்னெடுத்தோம்.

புரட்சிகர செயல்கள்

புரட்சிகர செயல்கள்

தமிழர் பண்பாட்டு மீட்சி அரசியலுக்காக வீரத்தமிழர் முன்னணி தொடங்கித் தஞ்சை பெருவுடையார் கோயிலின் உச்சியில் தமிழை முழங்க வைத்தோம். 2016 சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து நல்லரசியலை விதைக்கத் தொடங்கினோம். 2019 பாராளுமன்றத் தேர்தலில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு எனப் பாலினச் சமத்துவத்தைப் பேணி, இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் மாபெரும் முன்னெடுப்பை நிகழ்த்திய முதன்மை அமைப்பாக நாம் தமிழர் கட்சி தலைநிமிர்ந்து நின்றது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கான இடம், பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம், இசுலாமியச் சொந்தங்களுக்கு மற்ற கட்சிகளைவிட அதிக வாய்ப்பு, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கின்ற பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் வேட்பாளராக நிற்கின்ற சம உரிமை என மற்ற எந்தக் கட்சியும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களை நாம் தமிழர் கட்சி துணிந்து செய்தது.

நம்பிக்கை துளிகள்

நம்பிக்கை துளிகள்

கூட்டணி இல்லாமல், தனித்துவமானக் கொள்கைகளை முன்வைத்து, படித்த இளைஞர்கள், எளியப் பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி இத்தேர்தலை மிக எழுச்சிகரமாகச் சந்தித்தபோது கிடைத்த ஆதரவு, மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியது. கோடி கோடியாய்க் கொட்டப்பட்ட பணமூட்டைகளுக்கு மத்தியில் எளிய மக்களின் பிள்ளைகளான நாங்கள் பெற்றிருக்கின்ற 30 இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் என்பது சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளத்தக்க வாக்குகள் மட்டுமல்ல; வரலாற்றின்போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டெழும் என நம்புகிற ஒவ்வொரு தமிழரும் பெற்றிருக்கின்ற நம்பிக்கைத்துளிகள்;

தமிழ் உறவுகளுக்கு நன்றி

தமிழ் உறவுகளுக்கு நன்றி

இச்சமூகம் செழிக்க ஊன்றப்பட்ட ஆழ விதைகள். மாற்றத்திற்கான பெரும் பயணத்தில் நம்பிக்கை கொண்டு மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கான அடையாளச் சான்றுகள். சனநாயகம் சாகடிக்கப்பட்டுப் பணமும், அதிகாரமும் கோலோச்சிய இத்தேர்தல் களத்தில் அவை யாவற்றிற்கும் இரையாகாது தமிழ்த்தேசிய தத்துவத்திற்காகவும், எளிய மக்களின் நல்லரசியல் துளிர்க்கவும் பெரும் நம்பிக்கை கொண்டு வாக்குச்செலுத்தி அங்கீகரித்த தாய்த்தமிழ் உறவுகளுக்கு இந்தத் தருணத்தில் எனது அன்பினையும், நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.

புதிய அரசுக்கு நன்றி

புதிய அரசுக்கு நன்றி

எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் விளையும் உந்துதலைக் கொண்டு, மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும் எனவும், மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் எனவும் உறுதியளிக்கிறேன். புதிதாக அமைய இருக்கிற தமிழக அரசுக்கும், கேரளாவில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும், மேற்கு வங்கத்தில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அம்மையார் மம்தா பானர்ஜி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி எப்போதும் வெல்லும்! நாம் தமிழர் வெற்றி அதைச் சொல்லும்!! என்று சீமான் அறிக்கையில் தெரிவித்தார்.

English summary
Seaman said that because of the trust people have placed in us, we will be more active than ever on the battlefields and in relief efforts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X