"சாதிகள் இல்லையடி பாப்பா"! இன்னும் இருக்குதடி ஏம்பா? 2022ல் தமிழ்நாட்டை உலுக்கிய சாதிவெறி கொடூரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஆம் ஆண்டு இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் பல்வேறு நல்ல விசயங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் சாதிய கொடுமைகள் இந்த ஆண்டும் தொடர்கதையாகி இருக்கின்றன. விளாத்திக்குளம் தொடங்கி இறையூர் வரை தமிழ்நாட்டை அதிரவைத்த சாதிய கொடுமைகள் என்னவென்று பார்ப்போம்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று அன்று பாடிவிட்டு சென்றார் பாரதியார். மறுபக்கம் சாதி சான்றிதழை ஒழித்தால் சாதியை ஒழித்துவிடலாம் என்று சினிமாக்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு கூட்டம் பேசி வருகிறது. ஆனால், தினம் தினம் சாதி இருக்கிறது என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள் வெறியர்கள்.

பல பத்தாண்டுகளாக பாடபுத்தகங்களில் தவறாமல் இடம்பெற்று வரும் இந்த 3 வரிகள், "தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்" என்ற 3 வரிகள்தான். ஆனால், அதை பலர் உணர்வது இல்லை என 2022ல் நடந்த பின்வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நெல்லை மாணவர் கொலை

நெல்லை மாணவர் கொலை

கடந்த ஏப்ரல் இறுதியில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே கையில் சாதி கயிறு கட்டுவதில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக செல்வசூர்யா என்ற மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கடலூரில் அரசு பள்ளி

கடலூரில் அரசு பள்ளி

அதே மாதம் கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் சாதியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் T.புதுப்பாளையம், வண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெளிநபர்கள் உள்ளே புகுந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

தீயில் தள்ளப்பட்ட மாணவன்

தீயில் தள்ளப்பட்ட மாணவன்

கடந்த மே மாதம் திண்டிவனம் அருகே இருளர் சமூகத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சுந்தர்ராஜனை மற்ற மாணவர்கள் சாதி பெயர் சொல்லி நெருப்பில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து சக மாணவர்களால் இழிவுபடுத்தப்பட்டு வந்த நிலையில் தலைமை ஆசிரியரிடம் புகாரளித்ததால் 3 மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பச்சையப்பன் கல்லூரி ஆசிரியை

பச்சையப்பன் கல்லூரி ஆசிரியை

கடந்த ஆகஸ்டு மாதம் பேரறிஞர் அண்ணா படித்த சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா "கல்லூரிக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே BCயா, MBCயா, SCயா என்று தெரிந்துவிடும். நீ என்ன சாதி என்று எனக்கு தெரியாது. நீ என்ன சாதி?" என்று மாணவன் ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்லாம் சமம்தானே டீச்சர்

எல்லாம் சமம்தானே டீச்சர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே அரசு பள்ளி மாணவனிடம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாக செல்போனில் பேசும் ஆடியோ வெளியானது. பட்டியல் சமுதாய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக மாணவனை தூண்டிவிடும் வகையில் பேசிய அந்த ஆசிரியையிடம் மாணவன் முனீஸ்வரன் "எல்லோரும் சமம்தானே டீச்சர்" என்று பதிலளித்து நெத்தியடி கொடுத்திருப்பார். கடைசியில் அந்த ஆடியோவை வெளியிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவன் உதவினார்.

தின்பண்ட தீண்டாமை

தின்பண்ட தீண்டாமை

தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் அருகே பட்டியலின மக்களை ஊரை விட்டு பஞ்சாயத்து ஒதுக்கி வைத்ததால், தலித் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டங்கள் வழங்க மறுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரித்தபோது அங்குள்ள அரசு பள்ளியிலும் இதே நிலை தொடர்வதாக பட்டியலின மக்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து ஊரை விட்டு ஒதுக்கிய பஞ்சாயத்து தலைவர் உள்ளிடோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரத்தநாடு தீண்டாமை

ஒரத்தநாடு தீண்டாமை

அதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் தெற்கு என்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக இரட்டை குவளை, சலூனில் முடிவெட்ட மறுப்பு, முறை போன்ற சாதிய தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து உள்ளன. இதனை எதிர்த்து பேசியதற்காக அவர்களை ஆதிக்க சாதியினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கடையில் தலித் இளைஞருக்கு பொருட்கள் வழங்க மறுத்ததும், இதனால் அப்பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் சூழல் உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கொடூரம்

புதுக்கோட்டை கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரிடம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதாகவும், இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் புகாரளித்தனர். இது தொடர்பாக சாமியாடிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+