ஒன்றரை மாதத்திற்கு பிறகு.. சென்னை உட்பட 27 மாவட்டங்களில்.. நாளை முதல் திறக்கப்படும் வணிக வளாகங்கள்
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக, கோவில்கள் மற்றும் வணிக வளாகங்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கின்றன.
எனவே அங்கு உள்ள ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களும், சம்பளம் இன்றி தவிக்கிறார்கள்.

நாளை முதல் ஊரடங்கு தளர்வு
இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாளை 28ம் தேதி முதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
சென்னை உட்பட 27 மாவட்டங்களில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுகிறது. சென்னையில் வணிக வளாகங்கள் அதிகமாகும். அங்கு இன்றே, வணிக வளாகங்களையும், மால்களையும் சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உத்தரவுகள்
வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர்களை வைத்து இருக்கப்பட வேண்டும். அனைத்து வணிக வளாக நிர்வாகிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி
இதேபோல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், கோவில்கள் நாளை முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து நாளை காலையில் கோவில்களை திறந்து பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் கோவில்கள் நாளை திறக்கப்பட இருக்கின்றன.

வழிபாடு ஏற்பாடுகள்
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு பெறலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த தொடர்பு எண் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications