தமிழகத்தை நெருக்கும் தாழ்வு பகுதி.. 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. உஷார்!
சென்னை: தெற்கு வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி தமிழ்நாட்டில் 11 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதேபோல தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மாண்டஸ் புயலாக உருவெடுத்து சென்னையையொட்டி கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
புயல் கரையை கடந்த பின்னரும் கூட அடுத்த மூன்று நாட்களுக்கு புயல் விட்டுச் சென்ற மழை மேகங்கள் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவியது.

லேசான மழை
இதனையடுத்து தற்போது தெற்கு வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த முறை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கடரோல மாவட்டங்களை நோக்கி நகர்ந்த நிலையில், இந்தமுறை தென் கடரோல மாவட்டங்கள்-இலங்கையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை
அதேபோல கிறிஸ்துமஸ் தினமான 25ம் தேதியன்று தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என 8 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் எச்சரிக்கை
டிசம்பர் 26ம் தேதியை பொறுத்த அளவில், தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி என 11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், நாளை நாளை மறுநாள்(23,24) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில பகுதிகளில் இந்த காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications