மோடிக்கு ஸ்டாலின் பரிசாகத் தந்த தானியப் பெட்டி! தரமான சம்பவத்தின் பின்னணி என்ன?
சென்னை: 'இயற்கை வேளாண்மையா? என்னய்யா சொல்ற?' எனக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. பலரும் இன்றைக்கு ஆரோக்கியமான உணவு முறைக்குத் திரும்பி வருகிறார்கள். பெரிய நகரங்களில் மட்டும் மிக ஆடம்பரமாக அமைக்கப்பட்ட 'ஆர்கானிக்' கடைகள் இன்று ஆண்டிபட்டி பக்கம் உள்ள ஒரு குக்கிராமத்திற்குக்கூட வந்துவிட்டது. அந்தளவுக்குப் பாரம்பரிய உற்பத்தியை நோக்கிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் பரவலாக அதிகரித்து உள்ளது.
இந்த மாற்றம் லேசாக வந்ததில்லை. மறைந்த நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் அதற்கான விதையை வலுவாக ஊன்றி உள்ளனர். பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றி வந்த நெல் ஜெயராமன் உடல்ரீதியாக நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் தவித்த போது தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய திரை நட்சத்திரங்கள் பல லட்ச ரூபாயைக் கொடுத்த அவரது உயிரைக் காப்பாற்றப் போராடினர்.
இந்தவகையில் தமிழகம் மீண்டும் பாரம்பரியமான இயற்கை வேளாண்மைக்கு மிக வேகமாக நகர்ந்துவருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களை அறிவித்து டெல்டா உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வில் புதிய ஒளியைப் பாய்ச்சியது.

ஸ்டாலின் புதிய பாதை
குறிப்பாக இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த கையோடு டெல்லி விரைந்த ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்து விழாவில் பங்கேற்றமைக்காக நன்றியைத் தெரிவித்தார். அந்த நிகழ்வு அரசு ரீதியாக வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில்கூட தனிக் கவனம் செலுத்த விரும்பிய ஸ்டாலின், பிரதமருக்கு தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கினார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொதுவாகப் பிரதமரைச் சந்திக்கும் போது கடவுள் சிலைகளை வழங்குவதை நடைமுறையாக வைத்திருந்தனர். ஒருமுறை மோடியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணர் சிலையை வழங்கினார். அதேபோல் ஒபிஎஸ் ஒருமுறை தட்சிணாமூர்த்தி சிலையை வழங்கினார்.
இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறாக மாமல்லபுரம் வந்த மோடிக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசாக மகாபலிபுர சிற்பத்தை வழங்கினார். அதேபோல் தான் தானியப் பெட்டியை வழங்கி தனது தனித்தன்மையை இந்தியாவிற்கு உணர்த்தினார்.
மோடி ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும் போதும் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணிந்து அதன் பெருமையை பேசுவது இயல்பு. அதேபோல்தான் தமிழகம் வந்த மோடி வேட்டி சட்டையில் காட்சி அளித்தார். அவருக்கு ஒருபடி மேலே சென்று தன் மாநிலத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன் என்பதைப் பரிசுப் பொருள்மூலம் மோடிக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார் ஸ்டாலின்.

தனிப் பெட்டி உள்ளே
தானியப் பெட்டகத்திலிருந்தது என்ன? எனப் பலருக்குத் தெரியாது. அதில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக்கவுனி, சீரக சம்பா, குடவாழை ஆகிய அரிசி வகைகளும் கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களும் அடங்கியிருந்தன. சிவப்பு நிறத்தில் உள்ள மாப்பிள்ளை சம்பா 'ஆன்ட்டி ஆக்சிடன்ட்' தன்மை கொண்டது. குள்ளக்கார் என்ற அரிசி பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரக்கூடியது.
கருப்புக் கவுனி அரிசியைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அரசர்களுக்காக மட்டுமே பயிரிடப்பட்ட அரிசி அது. ஆந்தோசயனைன் நிறைந்த அந்த அரிசி புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. சீரக சம்பா அரிசியைப் பொறுத்தவரை, பாலாற்றங்கரையில் பரவலாகப் பயிரிடப்படும் அரிசி. தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் கொண்ட அரிசி.
குடவாழை என்ற அரிசியும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த அரிசி தோலுக்கு பொலிவை அளிக்கக்கூடியது. டெல்டா மாவட்டங்களில் விளையக்கூடியது. சிறுதானியங்களில் கம்பு என்று அழைக்கப்படும் தானியம், அருந்தானியங்களின் அரசன் என்று கூறப்படுகிறது. அரிசியை விட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கொண்டது இந்த தானியம். மிக மெதுவாகவே சக்தியைவெளிவிடும் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அரிசி இது.
வரகு என்ற தானியமும் கம்பைப் போலவே லோ கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட தானியம்தான். இலக்கியத்தில் தமிழ் மூதாட்டி அவ்வை கேட்டு உண்ட தானியமாக இது குறிப்பிடப்படுகிறது. சாமை என்பது பழங்குடி மக்களின் முக்கியமான தானியங்களில் ஒன்று. மருத்துவ குணமிக்க சிறுதானியம். பொன்னிறம் கொண்ட தினை என்ற தானியம் கண்களுக்கு நல்லது. வளரும் குழந்தைகளுக்கும் நலம் தரக்கூடியது. கேழ்வரகு இரும்பும் கால்சியமும் நிறைந்த ஒரு தானியம். தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு இதுதான்.
இத்தனை ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பேசும் தானியங்களைத்தான் மோடிக்கு வழங்கி இருந்தார் ஸ்டாலின்.
இந்த முயற்சிக்கு முன்பே ஸ்டாலின் அவரது கட்சியினருக்குச் சால்வைகளை பரிசாக அளிப்பதைத் தவிர்த்து புத்தகங்களை அளியுங்கள் என ஒருமுறை அறிவுரை வழங்கினார். அதன்மூலம் நசிவில் சிக்கித்தவிக்கும் பதிப்புத்துறைக்கு அவர் மறைமுகமாக ஆறுதல் அளித்திருந்தார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும் என்றும் இதற்குத் தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும் என்றும் கூறி இயற்கை வேளாண்மைக்கு புதிய பாதையைப் போட்டுக் கொடுத்தார்.

விவசாயிகளுக்குப் பரிசு
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி செ.மூர்த்தி ஒரு ஹெக்டரில் 10,672 கிலோ கருப்பு கவுணி நெல் ரகத்தைச் சாகுபடி செய்து மகசூல் செய்ததற்காகக் கடந்த ஆண்டு 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதே மாதிரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுபுதியவன் வாசனை சீரகச் சம்பாவை மகசூல் செய்தமைக்காக ரூ. 75 ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கி இருந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமிதேவி ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் ரகத்தை 10, 024.875 கிலோ மகசூல் செய்ததற்காக ரூ. 50 ஆயிரம் பரிசை வழங்கி ஊக்குவித்தார். இது மட்டுமல்ல அதிக நெல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் 'நாராயணசாமி நெல் உற்பத்தித் திறன்' விருதும் தொடர்ந்து வழங்கி வருகிறார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இயற்கை வேளாண்மைக்குத் தமிழக அரசு ஊக்கம் அளித்து வருவதற்காக சில எடுத்துக்காட்டுகள். இந்தப் பின்புலத்தில் தான் மோடிக்குப் பரிசாகத் தந்த தானியப் பெட்டியும் வருகிறது.
தமிழக அரசு இயற்கை வழிக்குத் திரும்புவது குறித்துப் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை இயக்கமாக நடத்திவரும் பாமயனிடம் பேசினோம். இவர் குற்றாலம் அருகே 100 நபர்கள் சேர்ந்து 100 ஏக்கரில் இயற்கை முறையிலான கூட்டுப்பணையை உருவாக்கி நடத்தி வருபவர்.

இயற்கை விஞ்ஞானி சொல்வது என்ன?
"மோடிக்கு ஸ்டாலின் தானியப் பெட்டியை வழங்கியது வரவேற்கத்தக்கது. நமது பாரம்பரிய விதைகள் மீதும் இயற்கை சூழல்மீதும் அதிக அக்கறை அவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு பக்கம் கடும் வெள்ளம் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் மிகப் பெரிய வறட்சி உண்டாகிறது. இந்தப் பருவ மாற்றம் மக்களிடம் ஓர் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இயற்கையை நாம் மீறுகின்றோம் என யோசிக்க வைத்துள்ளது. உலகம் முழுவதுமே மீண்டும் இயற்கை வழிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். அதற்கான அறிகுறியாகத்தான் ஸ்டாலின் விதைப் பெட்டியை வழங்கி இருக்கிறார்.
குறிப்பாக காபரேட் கம்பெனிகள் பாரம்பரிய விதைகளைக் கைப்பற்றி மரபணு மாற்றம் செய்யத் துடிக்கும் காலத்தில் ஸ்டாலின் இதைச் செய்துள்ளார். இதை ஒரு எதிர் கலாச்சார நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். கள யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு இதை அவர் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன்பு எல்லாம் எங்காவது ஒரு இயற்கை வேளாண்மை நடக்கும். இன்றைக்கு மாவடத்திற்கு 15 இயற்கைமுறை பண்ணைகள் செயல் பட்டு வருகின்றன. இன்று இரண்டு ஊரிகளில் ஒரு பண்ணை என இயற்கை விவசாயம் செய்யும் அளவுக்கு தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. குறிப்பாக நுகர்வோர் அதிகரித்துள்ளனர்." என்கிறார்.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
வேலூரில் பிறந்த நாள் விழாவில் பிரியாணி.. உற்சாகமாக சாப்பிட்ட பாத்திமா.. என்ன நடந்தது? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications