கோலாகலம்.. தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. போப் உருக்கம்..பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இன்று புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்றைய கிறிஸ்துமஸ் விழாவில் போப் பிரான்சிஸ் பொதுமக்களுக்கு உருக்கமான கோரிக்கை வைத்த நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று இரவே தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நிலையில் நேற்று முதல் எந்த வித தடையும இன்றி மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட தொடங்கினர்.

போப் தலைமையில் கொண்டாட்டம்
இந்தியா உள்பட பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸிஸ் தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. பேராலயத்தில் குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த வேளையில் போர் இல்லா உலகம் வேண்டும் என்பதற்காக போர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் உருக்கம்
இதுபற்றி போப் பிரான்சிஸ், ‛‛மனிதர்கள் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் தங்கள் சகோதர சகோதரிகள், உற்றார்களை கூட சுரண்ட பார்க்கின்றனர். எத்தனை போர்களை மனிதர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று கூட பல இடங்களில் பல்வேறு இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகிறது. போரால் ஏழ்மை, அநீதி போன்ற பிரச்சனையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இயேசு கிறிஸ்து ஏழையாக பிறந்து அப்படியே வாழ்த்து உயிர் துறந்தார். இதனால் பிறருக்கு நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமஸ் நாளை கடந்து செல்ல வேண்டாம்'' என சிறப்பு செய்தி வழங்கினார். அதன்பிறகு அனைவருக்கும் அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார்.

பிரதமர் மோடி வாழ்த்து
உலக நாடுகளை போல் இந்தியாவிலும் இன்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமசுக்கு தமிழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.. இந்த சிறப்பான நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும். கிறிஸ்துவின் உன்னதமான எண்ணங்களை எண்ணிப்பார்த்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என அவர் கூறியதை நாம் இந்த நாளில் நினைவு கூற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிறிஸ்துமஸ்
தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்று காலையிலும் புத்தாடை அணிந்து பிரார்த்தனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடந்தது. பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பிற தேவாலயங்களிலும் பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

தென்மாவட்டங்களில் கொண்டாட்டம்
மேலும் நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி மதுரை, சேலம், நாகப்பட்டினம், கோவை, தென்காசி உள்பட அனைத்த மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் நடந்த பிரார்த்தனை, திருப்பலிகளில் ஏராளமானவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றன.

அலங்காரம்
முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சர்ச்சகள் மற்றும் கிறிஸ்தவர்களி்ன வீடுகள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்கள் ஒளிர செய்யப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications