தமிழ்நாடு சரிவு பாதையில் செல்கிறது.. கல்வியில் பின் தங்கிவிட்டது.. ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
சென்னை: தமிழ்நாடு சரிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு வளர வேண்டுமென்ரால் இளைஞர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு மிகவும் பின்தங்கியுள்ள தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை ராஜ் பவன் வெளியிட்டுள்ளது. அதில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம் என்ற உறுதியை ஏற்றுள்ளோம். இதனை நிறைவேற்றுவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. அதற்கு ந்மது மாநிலம் அதன் உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால் அது நடப்பது போல தெரியவில்லை. தமிழ்நாடு தொடர்ந்து சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் வெளிப்பாட்டை காணும் போது, கவலையளிக்கும் வகையில் உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களால் 2ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவரப் படிக்க இயலவில்லை. உயர் கல்வியிலும் மாணவர்களின் நிலை இப்படிதான் இருக்கிறது. அதேபோல் கல்வி நிறுவனங்களை சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமான சிக்கலை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய சக்தி வாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது.
பட்டியல் சமூகங்ளுக்கு எதிரான சாதிய பாகுபாடுகள் தொடர்ச்சியாக மாநிலத்தில் அரங்கேறி வருகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதும் வேதனை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் நம்மை விடவும் முன்னேறி சென்றுள்ளார்கள். இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு பாதகமான சூழலை உருவாக்கும். அதேபோல் தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்ற நிலையில் இருக்கிறது. இதனால் அதிகரித்து வரும் தற்கொலைகளும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications