பொங்கல் ஓவர்.. இனிதான் சிக்கலே.. தமிழ்நாட்டில் விரைவில் ஸ்பெஷல் ஊரடங்கு? மேலும் கட்டுப்பாடுகளா?
சென்னை: தமிழ்நாடு முழுக்க நேற்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது ஜனவரி 31 வரை தளவுர்களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொங்கலை முன்னிட்டு 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டில் உயர்ந்தபடியே இருக்கிறது.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் தினசரி கேஸ்கள் வெறும் 1000 என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் வேகமாக கேஸ்கள் உயர்ந்த நிலையில் தற்போது தினசரி கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,18,017 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
ஆக்டிவ் கேஸ்கள் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பின் மீண்டும் 1 லட்சம் என்ற அளவை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28,91,959 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கணக்குப்படி தமிழ்நாட்டில் இதுவரை 231 பேர் ஓமிக்ரான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 8963 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 50977 ஆக உயர்ந்துள்ளது.

பொங்கல் கொரோனா
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பொங்கல் காரணமாக கூடுதல் கேஸ்கள் வரும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. நகரத்தில் இருந்து பெருவாரியான மக்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கிராமங்களில் வரும் நாட்களில் கேஸ்கள் உயரும் அபாயம் உள்ளது. சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் கிராமங்களில் கொரோனா கேஸ்கள் உயரும் அபாயம் உள்ளது.

புதிய அலை
இதற்கு முந்தைய அலைகளில் பண்டிகை நாட்களின் போதும் இதேபோல்தான் தமிழ்நாட்டில் கேஸ்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பொங்கல் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் சென்றனர். சென்னையில் ஷாப்பிங் ஏரியாக்களில் பெரிய அளவில் கூட்டம் காணப்பட்டது. அதேபோல் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் அங்கும் கேஸ்கள் பரவும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு ஓமிக்ரான்
அதிலும் ஓமிக்ரான் கேஸ்கள் காய்ச்சல் போலவே இருப்பதால் ஓமிக்ரான் இருக்கும் பலர் தங்களுக்கு ஓமிக்ரான் இருப்பதே தெரியாமல் காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு அதை மற்றவர்களுக்கு பரப்பும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வரும் வாரம் இதற்காக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

தமிழ்நாடு லாக்டவுன்
கட்டுப்பாடுகளை உயர்த்துவது, சில கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் முடிந்த காரணத்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூடப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் பொதுப்போக்குவரத்தில் 70 சதவிகித பயண கட்டுப்பாடு மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என்ற அளவிற்கு மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் தியேட்டர்களுக்கு இப்போது கட்டுப்பாடு இல்லை.

ஊரடங்கு
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேறு ஒரு காரணமும் இருக்கிறது. இதுவரை நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கையின் படி தமிழ்நாட்டில் வரும் ஜனவரி இறுதியில்தான் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும். இதனால் அதற்குள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடு
Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) ஆய்வு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் ஜனவரி மாத இறுதியில் 80 ஆயிரம் என்ற அளவை தொடும். அதாவது இன்னும் 15 நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும். இப்போதே தினசரி கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் பல லட்சத்தை தொடும் அபாயம் உள்ளது.

அதிகரிக்கும் கேஸ்கள்
ஓமிக்ரான் கேஸ்கள் என்னதான் மைல்டாக இருந்தாலும் பல லட்சம் ஆக்டிவ் கேஸ்கள் இருந்தால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரம் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பின் இரண்டாவது ஆலோசனை மேற்கொண்டு லாக்டவுனில் கூடுதல் கட்டுப்பாடு அல்லது தளர்வு கொண்டு வருவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications