கேரளா, கர்நாடகாவில் கொரோனா வீரியமாக உள்ளது.. மெத்தனம் வேண்டாம்.. எச்சரிக்கும் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஓரிரு மாதங்கள் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் கடந்த 2021 ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிகளவிலான மக்களுக்கு எளிதில் கொரோனா தடுப்பூசி போடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

100% தடுப்பூசி செலுத்த இலக்கு
அந்த வகையில் தமிழ்நாட்டில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் இதுவரை 23 மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது. சனிக்கிழமையான இன்று 24 வது மெகா தடுப்பூசி முகாம்கள் காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகின்றன.

கேரளா, கர்நாடகாவில் குறையாத கொரோனா வீரியம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் வீரியமாக இருந்து வருகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்பு நேற்று பூஜ்ஜிய நிலையை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், ஓரிரு மாதங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

1.33 கோடி பேர் 2 வது தவணை தடுப்பூசி போட வேண்டும்
2 வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 1.33 கோடி பேருக்காகவே தமிழ்நாடு அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. நீங்கள் காணும் இடங்களில், உங்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறோம்.

18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி
15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை பள்ளியில் தொடங்கி வைத்தார். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 33.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை முதல் தவணையாக 28.04 பேருக்கு கொரோனா தடுப்பூசிதமிழ்நாடு அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பார்த்தால் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 83.8% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்." எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் குறைந்த கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 112 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 மாதங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் ஒரு உயிரிழப்பு கூட நேற்று பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கர்நாடகாவில் நேற்று 181 பேருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், மா.சுப்பிரமணியன் கர்நாடகாவில் கொரோனா தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications