தங்கர்பச்சான் வீட்டுக்கு ஓடோடிய மின் வாரிய அதிகாரிகள்... இதற்கு காரணம் அந்த ஒற்றை கேள்வி..!
சென்னை: மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா என சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று குறைகளை கேட்டறிந்தனர்.
மின்கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என அவர் எழுப்பியிருந்த ஒற்றைக் கேள்வி தான் மின்வாரிய அதிகாரிகளை இல்லம் நோக்கி செல்ல வைத்துள்ளது.
பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது
இதுவே பொதுமக்களில் யாரேனும் ஒருவர் மின்வாரிய குறைகளை இப்படி சுட்டிக்காட்டினால் அவர்களது வீட்டுக்கும் சென்று அதிகாரிகள் புகார்களை கேட்டறிவார்களா என்ற கேள்வி பிறந்துள்ளது.

குற்றச்சாட்டு
தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டண கணக்கீடு முறையை விமர்சித்து இயக்குநர் தங்கர்பச்சான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். தனது வீட்டு மின் கட்டண கணக்கீடு முறையில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து இன்று அவரது வீட்டுகே சென்ற மின்வாரிய செயற்பொறியாளர்கள் தங்கர்பச்சானின் புகாரை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நல்ல விஷயம்
மின் வாரிய அதிகாரிகளின் இது போன்ற துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது தான். ஆனால் இதுவே சாமனியர்களில் ஒருவர் இப்படி புகார் கூறியிருந்தால் அவர்களது குறையும் இதேபோல் உடனடியாக களையப்படுமா என்றால் அது சந்தேகமே. சினிமா, அரசியல், தொழில் பிரபலங்களுக்கு காட்டும் மரியாதையில் சிறிதளவாவது பொதுமக்களுக்கும் மின் வாரிய அதிகாரிகள் காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே நேற்று தங்கர்பச்சான் விடுத்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

மின் கட்டணம்
''அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள்கூட தாமதமாகாமல். ஆனால், மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.''

இரண்டே கால் மடங்கு
''ஆனால் கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.''

அச்சம்
''இந்த நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.''

உதவுங்கள்
''தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகிறேன்.'' இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனிடையே மின் கட்டணத்தை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக புகார்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கவனத்தில் கொண்டு
இதனால் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கவனத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே மின்வாரிய பிரச்சனைகளை, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. பிரபல இயக்குநர் ஒருவரே, மின் கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என்ற கேள்வியை எழுப்பி பொதுத்தளத்தில் அறிக்கை வெளியிட்டது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.