இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை! மீனவர்களுக்கு ’MET' கொடுத்த முக்கிய வார்னிங்!
சென்னை : மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கனமழை
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கடலூர், திருவள்ளூர் தலா 5, சின்கோனா (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) , திண்டிவனம் (விழுப்புரம்) தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் 6ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இன்று முதல் நாளை மறுநாள் வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications