"5 கி.மீ.." நாளை வாக்கு எண்ணிக்கை.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது.
தேர்தலையொட்டி பதிவான வாக்குகள் நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தேர்தலின் சில இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க 6 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 5 மணிக்கு வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

அதிமுக - திமுக புகார்
நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு மையங்களில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினரும், அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படுத்த முயல்வதாக திமுகவினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன்காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர் ஆலோசனை
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கியதோடு மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களையும் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டறிந்தார்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
கூட்டத்திற்குப் பின், அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும், தேவைப்படின் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியே அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications