விலையில்லா லேப்டாப் எப்போ? அத மொதல்ல தூக்குங்க.. பறந்த அதிரடி உத்தரவு - எப்படியோ.. மாணவர்கள் ஹேப்பி!
சென்னை : கடந்த 3 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படாத நிலையில், அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.
தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச மடிக்கணினி
தமிழகத்தில் 2011-12ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

3 ஆண்டுகளாக மிஸ்ஸிங்
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு வரை 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன. இந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா என எதிர்பார்த்து வந்தனர்.

ஜெயலலிதா ஈபிஎஸ் படங்களை
இந்நிலையில், விலையில்லா மடிக்கணினிகளின் வால்பேப்பரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில், அவை பள்ளிக்கல்வித் துறையிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

லேப்டாப் வழங்க ஏற்பாடு
இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால், மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை அகற்றுமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர்களின் படங்களை அகற்றிய பின், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications