அடேங்கப்பா! 7,700 வார்டுகளை அப்படியே அள்ளிய திமுக.. மற்ற கட்சிகளின் நிலை என்ன? முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இருக்கும் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாகக் கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் 6 வார்டுகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
மீதமுள்ள அனைத்து வார்டுகளிலும் கடந்த ஜன. 19ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவானது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று மாநிலத்தில் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

திமுக மாபெரும் வெற்றி
மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி குறைந்தது 430 பேரூராட்சிகளைக் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுகவை எதிர்த்துக் களமிறங்கிய அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பெரியளவில் வெல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக திமுக 69%, அதாவது 7700 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள்
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளில் மொத்த 1374 வார்டு உறுப்பினர்கள் பதவி உள்ளது. அதில் திமுக கூட்டணி மட்டும் 1062 வார்டுகளில் வென்றுள்ளது. குறிப்பாக திமுக மட்டும் 952 வார்டுகளில் வென்றுள்ளது. அடுத்து மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக 164 வார்டுகளில் வென்றுள்ளன. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 73 வார்டுகளையும் சிபிஎம் 24 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக 22 வார்டுகளிலும், சிபிஐ 13 வார்டுகளிலும் வென்றுள்ளன. இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களும் மட்டுமே 125 வார்டுகளில் வென்றுள்ளனர்.

நகராட்சிகளில் என்ன நிலை
அதேபோல தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் உள்ள 3843 வார்டு உறுப்பினர்கள் பதவிகளில், திமுக கூட்டணி மட்டுமே 2571 வார்டுகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திமுக மட்டும் 2360 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், அதிமுகவால் வெறும் 638 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து காங்கிரஸ் 151 வார்டுகளிலும், பாஜக 56 வார்டுகளிலும் வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே 41 மற்றும் 19 வார்டுகளை கைப்பற்றியுள்ளன. கடந்த 2011 மாநில எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவால் 12 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதர கட்சியினரும் சுயேச்சைகளும் 565 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைபற்றி உள்ளனர்.

பேரூராட்சிகளைத் தட்டி தூக்கிய திமுக
பேரூராட்சிகளைப் பொருத்தவரை மொத்தம் 490 பேரூராட்சிகளில் மொத்தம் 7621 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. அதில் திமுக கூட்டணி 4833 வார்டுகளில் வென்றுள்ளன. 4388 வார்டு உறுப்பினர் பதவி இடங்களை திமுக கைப்பற்றி உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக 1206 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அடுத்து காங்கிரஸ் கட்சி 368 பேரூராட்சி வார்டுகளில் வென்று உள்ளது.

பாஜக எவ்வளவு இடங்கள்
அதிமுக உடனான கூட்டணியில் இருந்து வெளியே வந்து, இந்தத் தேர்தலில் தனித்து களம் இறங்கிய பாஜக 230 பேரூராட்சி வார்டுகளில் வென்றுள்ளது. இவை தவிர திமுக கூட்டணியில் களமிறங்கிய சிபிஎம் 101 வார்டுகளிலும், சிபிஐ 26 வார்டுகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதற்கு அடுத்து தேமுதிக 23 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ள நிலையில், மற்றவர்கள் 12 வார்டுகளில் வென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications