அ.ம.மு.க. வேட்பாளர்களை ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்கினர்.. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு!
சென்னை: தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று சென்னையில் வாக்களித்த டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
அ.ம.மு.க. வேட்பாளர்கள் ரூ10 கோடி,ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டது உண்மைதான் எனவும் டி.டி.வி தினகரன் கூறினார்.

வெயிலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோடை வெயிலுக்கு மத்தியிலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

டி.டி.விதினகரன் ஓட்டு போட்டார்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடும் டி.டி.விதினகரன் , சென்னை அடையாறு தாமோதபுரம் வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

50,000 வாக்குகள் மேல் பெறுவேன்
வாக்களித்த பின்னர் டி.டி.விதினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தீய சக்திகளான தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள். கோவில்பட்டி தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்
அ.ம.மு.க. வேட்பாளர்கள் ரூ.10 கோடி,ரூ.20 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டது உண்மைதான். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல் பல இடங்களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று டி.டி.விதினகரன் தெரிவித்தார்.