துரோகத்தால் சிலுவை சுமந்த ஏசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள் - தலைவர்கள் ஈஸ்டர் தின வாழ்த்து
சென்னை: துரோகத்தாலும், பகையாலும் கல்வாரி சிலுவையில் பாடுகளை சுமந்த ஏசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், நமக்கு புதிய நம்பிக்கையோடும் புதிய மகிழ்ச்சியோடும் கூடிய புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஈஸ்டர் பெருநாள் தின வாழ்த்து கூறியுள்ளார். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோரும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பெருநாள் தின வாழ்த்து கூறியுள்ளனர்.
Recommended Video

ஏசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி அளித்தார் என நம்பப்படுகிறது. அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் என்று சொல்லப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். நாளைய தினம் ஈஸ்டர் பெருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துச்செய்தியை தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அன்பின் வடிவான அருள்நாதர் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த பொன்னாளாம் ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்! pic.twitter.com/rVBSltL8KI
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 3, 2021
துரோகத்தாலும், பகையாலும் கல்வாரி சிலுவையில் பாடுகளை சுமந்த ஏசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், நமக்கு புதிய நம்பிக்கையோடும் புதிய மகிழ்ச்சியோடும் கூடிய புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும் என்றும், இதுவரை நம்மைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சகோதர அன்பே பிரதானம் என்பதை போதித்த அருள்நாதரின் போதனைகளை என்றும் நம் இதயத்தின் முன் நிறுத்தி அவற்றை கடைபிடிப்போம் என்பதை தெரிவித்து ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகின்றேன் என்றும் திரு. டிடிவி தினகரன் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ அறிக்கை
ஈஸ்டர் பெருநாள் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் "மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக நிகழ்வு, மீட்பர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.
அந்தகார இருள் விலகி ஒளி வெள்ளம் பாய்வது போல், மூன்றாம் நாள் இயேசுபெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதயத்தில் அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்குகின்ற இயேசுநாதரின் அறிவுரைகள், இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை ஆகும். கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை, அவர்களது மனங்களில் ஈஸ்டர் ஏற்படுத்துகின்றது.
மீட்பரின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டின. ஊழல் நரகத்தில் சிக்குண்டு நலிந்துள்ள தமிழகத்தில், நேர்மையான நல்லாட்சி மலரும் என்ற நம்பிக்கையுடன் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கே எஸ் அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். - தலைவர் திரு. @KS_Alagiri pic.twitter.com/3WO2SLG9Kf
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 3, 2021
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.