தமிழக மக்கள் தொகையில் பாதி தான் அர்ஜென்டினா! நம்மால் ஏன் முடியாது? ஊக்கமளித்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தனி மனித முன்னேற்றம் மட்டுமல்ல, ஒரு விளையாட்டால், ஒரு விளையாட்டு வீரரால் உலகையே நம்மை திரும்பி பார்க்க வைத்து விட முடியும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகமே அர்ஜன்டினாவை தேட ஆரம்பித்து விட்டதாகவும் இந்தியாவோடு ஒப்பிடுகையில் அர்ஜென்டினா மிகச்சிறிய நாடு எனவும் கூறினார்.
மேலும் குறிப்பாக அர்ஜென்டினாவின் மக்கள்தொகை வெறும் 4.7 கோடி தான் என்றும் இது தமிழக மக்கள் தொகையில் பாதி தான் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி விளையாட்டுப் போட்டிக்கான உலகக் கோப்பையினை கேரள மாநில ஹாக்கி சம்மேளன நிர்வாகிகளிடம் வழங்கிய நிகழ்வில் அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தும்
விளையாட்டு என்பது நம் இளைஞர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தும் ஓர் இடம். இளைஞர் சக்திகளை ஒருங்கிணைத்து நல்ல மாற்றத்தை கொன்டுவருவதற்கான களமாகவும் விளையாட்டுதான் உள்ளது. நாம் படித்துவிட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும், அல்லது நிறுவனங்களை உருவாக்கினாலும், குழுவாக இணைந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. அதை விளையாட்டுகள் தான் நமக்கு கற்றுத் தருகின்றன.

வெற்றி தோல்வி
அதேபோல், வெற்றித் தோல்விகளுக்கும் விளையாட்டு போட்டிகள் தான் பக்குவப்படுத்துகின்றன. வெற்றிபெறும் நேரத்தில் தலைகணம் கொள்ளாமலும், தோல்வியுறும் நேரத்தில் துவளாமலும் இருக்க விளையாட்டுதான் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன. தனி மனித முன்னேற்றம் மட்டுமல்ல, ஒரு விளையாட்டால், ஒரு விளையாட்டு வீரரால் உலகையே திரும்பி பார்க்க வைத்து விடவும் முடியும்.

அர்ஜென்டினா
இந்தியாவோடு ஒப்பிடுகையில் அர்ஜென்டினா மிகச்சிறிய நாடு. அர்ஜென்டினாவின் மக்கள்தொகை வெறும் 4.7 கோடி தான். தமிழக மக்கள் தொகையில் பாதிதான். சில தினங்களுக்கு முன் நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டது. மெஸ்ஸி அடித்த கோல்களால் உலகமே அர்ஜன்டினாவை தேட ஆரம்பித்துவிட்டது.

சுந்தர்பிச்சை
கூகுள் சி.இ,ஓ சுந்தர்பிச்சைகூட அதைதான் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியை உலக அளவில் கூகுளில் தேடியுள்ளனர் என்கிறார். இதையெல்லாம் யோசிக்கும்போது விளையாட்டு எவ்வளவு முக்கியமானது, எவ்வளவு கவனம் பெறக்கூடியது என்பது புரியும். அத்தகைய விளையாட்டுகளில் ஆர்வத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நிச்சயம் இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் உதவும் என நம்புகிறேன்.

ஆர்வத்தை உருவாக்க வேண்டும்
நாம் முதலில் நம் இளைஞர்களிடம் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அடுத்து திறமையாளர்களை கண்டு பிடிக்க வேண்டும். சரியான திறமையாளர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வசதிகளை நாம் செய்து தரவேண்டும்.. அதை ஒரு பணியாக நினைக்காமல், கடமையாக எண்ணி உழைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை தயாராக இருக்கிறது என்பதை துறையின் அமைச்சராக தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications