யுஜிசி முடிவும்.. தமிழக அரசின் நிலைப்பாடும்.. அரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா?... முழு பின்னணி!
சென்னை: தமிழகத்தில் அரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று கல்லூரி மாணவர்கள் இடையே கேள்விகள், குழப்பங்கள் எழுந்துள்ளது. இதில் தமிழக அரசு விரைவில் தெளிவான அறிவிப்பை வெளியிடும் என்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
தமிழகத்திலும் கூட 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தற்போது நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெரும் சட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்புக்கு இடையில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நாடு முழுக்க நடக்க உள்ளது.

உறுதியாக உள்ளது
இன்னொரு பக்கம் நாடு முழுக்க கல்லூரி இறுதி தேர்வுகளை நடத்துவதில் பல்கலைக்கழக மானிய குழு உறுதியாக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டியது இல்லை. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது.

யுஜிசி எதிர்ப்பு
இன்னும் சில மாநிலங்கள் இதேபோல் கல்லூரி தேர்வுகளில் தளர்வுகளை கொண்டு வந்தது. இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது. அதோடு மாநில அரசுகளுக்கு தேர்வுகளை தள்ளி வைக்கும், நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை. இதை யுஜிசிதான் எடுக்க முடியும். என்ன நடந்தாலும் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நிச்சயம் நடக்கும் என்று யுஜிசி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

அரியர் தேர்வு
இந்த நிலையில்தான் தமிழகத்தில் அரியர் தேர்வுகளுக்கு பீஸ் கட்டிய எல்லோரும் பாஸ் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பல பாட பிரிவுகளில் அரியர் வைத்து பாஸ் செய்ய முடியாமல் கஷ்டப்படும் மாணவர்கள் இதனால் பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.

என்ன எதிர்ப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. கண்டிப்பாக பொறியியல் படிப்பில் அரியர் தேர்வுகளை நீக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எடுத்து இருந்தது. இதனால் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் யுஜிசியம் தமிழக அரசின் முடிவை எதிர்த்தது.

எதிர்த்தது
கல்லூரி இறுதி தேர்வுகளையே நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், அரியர் தேர்வுகளை மாநில அரசுகளால் நீக்க முடியாது என்று யுஜிசி கூறிவிட்டது. இந்த நிலையில்தான் அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) நடைமுறைபடியே செயல்படுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். யுஜிசி விதியின் படியே அரியர் தேர்வுகளை ரத்து செய்தோம், ஆனாலும் யுஜிசி முடிவை ஏற்றுக்கொள்ள தயார் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

என்ன முடிவு
இதில் யுஜிசி இன்னும் முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக அரியர் தேர்வு நடக்கும் என்கிறார்கள். கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்கும் போது அதோடு சேர்த்து அரியர் தேர்வுகளை நடத்த யுஜிசி யோசனை செய்து வருகிறது என்கிறார்கள். இது தொடர்பாக அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். தமிழக அரசு இதில் மாணவர் பக்கமே நிற்கிறது. ஆனால் அரியர் தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் ரத்து செய்யும் எண்ணத்தில் யுஜிசி இல்லை.. அதனால் தேர்வுகள் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.