24 மணி நேர மௌனம்.. ஒரு வார்த்தை கூட பேசாத அண்ணாமலை.. அதிமுக முடிவால் பாஜக ஷாக்? என்ன நடந்தது?
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என எடப்பாடியின் உத்தரவின் பேரில் நேற்று அழுத்தமாக தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பு பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். அதோடு இது பற்றி ஊடகங்களில் பேசாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அமைதி காத்து வருகிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது. முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார். இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கூட்டணி முறிவு: இதையடுத்தே அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என எடப்பாடியின் உத்தரவின் பேரில் நேற்று அழுத்தமாக தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு முழுவதும் ஸ்வீட் கொடுத்து உற்சாகமடைந்தனர் அதிமுகவினர். பாஜகவையும் அண்ணாமலையையும் அதிமுக கடுமையாக விமர்சித்த நிலையில், பாஜக நிர்வாகிகளும் அதிமுகவை விமர்சித்தனர்.
மௌனம்: இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். அதோடு இது பற்றி ஊடகங்களில் பேசாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அமைதி காத்து வருகிறார். முக்கியமாக கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அண்ணாமலை இருக்கிறாராம்.
அண்ணாமலையை தொடர்புகொண்டு கடிந்து கொண்டிருக்கிறார் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ். ஏன் இப்படி கூட்டணி முறியும் நிலைக்கு கொண்டு சென்றீர்கள் என்றுள்ளார். மேலும், தமிழக பாஜகவின் மேலிட நிர்வாகிகளை தொடர்பு கொண்டும் பேசியுள்ளார் சந்தோஷ். இதனையடுத்து, "அதிமுக-பாஜக கூட்டணி பாறை போல உறுதியுடன் இருக்கிறது" என்று திருப்பதி நாராயணன் பதிவு செய்துள்ளார்.
"கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது. கூட்டணியை பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். அதனால், கூட்டணியை யாரும் விமர்சிக்கக்கூடாது" என்று தமிழக பாஜகவினருக்கு கரு.நாகராஜனும் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்தே நாம் இனி இதில் பேச வேண்டாம். கட்சியை தனியாக வளர்க்க வேண்டும். கட்சிக்கு புதிய முகம் கொடுக்க வேண்டும். அதிமுகவை நம்பி இருக்க கூடாது என்றுதான் இப்படி எல்லாம் செய்தேன். அதை மேலிடம் புரிந்துகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை.
நான் இதில் பேசாமல் அமைதியாகவே இருக்கிறேன். கட்சியை வளர்க்கும் பணிகளை மட்டும் செய்கிறேன் என்று அண்ணாமலை முடிவு எடுத்துள்ளாராம். இதன் காரணமாகவே அவர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி கனவு அம்பேல்: தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் முழக்கமிட்டு இருந்தார். அவர் எப்போது சொன்னாரோ அப்போதில் இருந்தே பாஜக கூட்டணியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது.
சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது. ஏற்கனவே தேமுதிக, பாமக கூட்டணி அதிமுகவுடன் முறிந்த நிலையில் தற்போது பாஜக - அதிமுக கூட்டணியும் முறிந்துள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி வைப்பதும் சந்தேகம் ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications