‘டார்கெட் 4’.. டைரக்ட் அட்டாக்! எடப்பாடி பழனிசாமியின் அதிரடி மூவ்களுக்கு பின்னே பரபர பிளான்கள்!
சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை தொடர்ந்து விளாசி வருவதோடு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து அறிவித்து அதிரடி காட்டுவதற்குப் பின்னால் 4 முக்கியமான கணக்குகள் இருக்கின்றனவாம்.
அதிமுக குழப்பங்களுக்கு மத்தியில், தனது எதிர்க்கட்சித் தலைவர் இமேஜை பெரிதாக்கிக் கொள்வது உள்ளிட்ட 4 விஷயங்களை கருத்தில் கொண்டே முதல்வர் ஸ்டாலின் மீது டைரக்ட் அட்டாக்கை நடத்தி வருகிறார் ஈபிஎஸ் என்கிறார்கள்.
மேலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, உட்கட்சிக் குழப்பங்களில் சிக்கித் தவிக்கிறது என்ற விமர்சனங்களை நொறுக்கும் வகையில், திமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

நேரடி மோதல்
தமிழ்நாடு அமைதியாக இருப்பதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலருக்கு வயிறு எரிகிறது, சட்டம் ஒழுங்கை கெடுக்கலாமா என சதி செய்து கொண்டிருக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின் பேசியதுமே, போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு என பட்டியலைத் தூக்கிக் காட்டி திமுக அரசை விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை என்று சுமார் 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 148 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது விந்தையாக உள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் எடப்ப்பாடி பழனிசாமி.

முதல்வர் சொல்றாரு.. ஆனா
மேலும், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், டிஜிபி கஞ்சாவை ஒழிப்பதற்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 என்று மாநிலம் முழுவதும் சோதனைகள் நடத்துகிறார். திடீரென்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 24 மணி நேரத்தில் தமிழகமெங்கும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான கிலோ சுஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பிடிபடுகிறது, பிறகு மீண்டும் மூன்று நான்கு மாதங்கள் கழித்து சோதனை, கைது, அறிக்கை என்ற நாடகம் தொடர்கதையாக உள்ளது என கடுமையாக விமர்சித்தார் ஈபிஎஸ்.

டார்கெட் 1 - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமியின் இந்த முதல்வர் மீதான நேரடி அட்டாக்குகளுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி 3 திட்டங்களை வைத்திருக்கிறாராம். போதைப் பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு விஷயங்களை டார்கெட் செய்து திமுக அரசை விமர்சிப்பதன் மூலம், ஸ்டாலினின் இமேஜை உடைத்து, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக மக்கள் மத்தியில் பதிய வைப்பதுதான் முதல் டார்கெட்டாம். இதையொட்டியே, தான் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், பிரஸ் மீட்டிலும், போதைப் பொருள் புழக்கத்தையும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.

டார்கெட் 2
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு குற்றப் பத்திரிக்கையில், விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்டோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு வழக்கு பேசுபொருளானது. இதுபோல அதிமுக மீது எழுந்து வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் அதன் மீதான பொதுமக்களின் பார்வையை திசைதிருப்பி, திமுக ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு டைவர்ட் செய்து விட வேண்டும் என்பது ஈபிஎஸ் பேச்சுகளின் இன்னொரு டார்கெட்டாம்.

டார்கெட் 3
அதிமுக உட்கட்சி மோதல் விவகாரம் நீடித்து வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் அவரது அணியினர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்புகளுக்கு பதிலடி கொடுத்து அரசியல் செய்து வருவது ஒருவகையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக மாறிவிடுகிறது, அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என திமுகவும் ஹாயாக வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலைமை தொடரக்கூடாது என்றே எடப்பாடி பழனிசாமி முன்னணியில் வந்து திமுக அரசை, குறிப்பாக ஸ்டாலினை டார்கெட் செய்து களமாடுகிறார் என்கிறார்கள்.

டார்கெட் 4
மேலும், தாங்கள் திமுக ஆட்சியில் பழிவாங்கப்படுவதாகவும், திமுக அரசை விமர்சிப்பதால் தங்கள் மீது பொய் வழக்குப் போடுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் வந்த வேலுமணி வழக்கு உத்தரவும் இதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிட்டது. எடப்ப்பாடி பழனிசாமி இதனை முன்வைத்துப் பேசுவதற்குக் காரணம், எதிர்க்கட்சி தாங்கள் தான், வலுவான தலைவர் தான் தான், அதனால் தான் திமுக அரசு எங்களை டார்கெட் செய்கிறது அனைத்து தரப்புக்கும் கட் அண்ட் ரைட்டாக தெரிவிப்பதற்காகத்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications