சென்னை ஏர்போர்ட் 2.o.. பரந்தூர் விமான நிலையம் உண்மையில் பலன் தருமா! காத்திருக்கும் சவால்கள் என்ன
சென்னை: பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய ஏர்போர்ட் குறித்தும் அதற்கான தேவை உண்மையில் உள்ளதா என்பதையும் பார்க்கலாம்.
சென்னையில் நகருக்குள் அமைந்துள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளாகவே நெரிசல் அதிகமாகவே உள்ளது. நகருக்குள்ளேயே இருப்பதால் விரிவாக்கம் செய்வதும் கிட்டதட்ட முடியாத ஒன்றாகவிட்டது.
இதன் காரணமாகச் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பண்ணூர், பாரந்தூர், படலம் மற்றும் திருப்போரூர் பரிசீலனையில் இருந்தன.

பரந்தூர்
அதில் பண்ணூர், பாரந்தூர் ஷாட் லிஸ்ட் செய்யப்பட்டு இறுதியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டாவது விமான நிலையம் வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், அப்பகுதியில் வாழும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இரு இடங்கள்
அதேநேரம் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரவே இன்னும் குறைந்தது சில ஆண்டுகள் ஆகும். நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி, விமான நிலையம் செல்ல இருக்கும் போக்குவரத்து வசதிகள் பற்றிய கேள்விகளுக்கு வரும் காலத்தில் நமக்குப் பதில் கிடைக்கும். பண்ணூர், பாரந்தூர் ஷாட் லிஸ்ட் செய்யப்பட்ட நிலையில், ஏன் அரசு பாரந்தூரை டிக் அடித்தது என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். ஏனென்றால் பண்ணூர் (55 கிமீ) பரந்தூரை (69 கிமீ) விட அருகே அமைந்துள்ளது.

ஏன் பரந்தூர்
ஆனால், பண்ணூரில் ஏற்கனவே பல நகரங்கள் மற்றும் தொழில் பூங்காக்கள் உள்ளன. எனவே, அங்கு விமான நிலையத்தை அமைப்பது கடினம் என்பதாலேயே பரந்தூர் சேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது 1998இல் இருந்தே பேச்சுவார்த்தையில் இருந்தது. ஆனால் அப்போதில் இருந்தே நிலம் தான் பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது. இப்போது பரந்தூரை தேர்வு செய்யவும் அதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

செலவு
இந்த விமான நிலையத்தை அமைக்க ரூ 20 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு அதிகபட்சம் 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் 4971 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு நடந்தாலும் கூட விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரக் குறைந்தபட்சம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும்.

தனியார் பங்களிப்பு
இப்போது கிரீன்ஃபில்ட் விமான நிலையங்கள் அனைத்தும் தனியார் பங்களிப்புடன்தான் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது விமான நிலையமும் எதாவது தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடனேயே கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது எந்த தனியார் நிறுவனம் என்பது சில மாதங்களில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனம்பாக்கம்
இரண்டாவது ஏர்போட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், இது கட்டாயம் தேவை என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போதுள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் ஆறாவது பிஸியான விமான நிலையமாகும். சராசரியாக, அங்கு ஒரு நாளைக்கு சுமார் 400 விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்கு 2.2 கோடி மக்களை அந்த விமான நிலையம் கையாள்கிறது. ஆனால், இப்போது விமான துறை அடையும் வளர்ச்சிக்கு இது போதாது. எனவே இரண்டாவது விமான நிலையம் என்பது கட்டாயம் தேவை.

மெகா ஜெட்கள்
பரந்தூரில் புதிதாக அமையும் ஏர்போர்ட் அதிநவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்தால் கையாள முடியாது 600 இருக்கைகளைக் கொண்ட பிரம்மாண்டமான விமானங்களைக் கூட பரந்தூர் ஏர்போர்ட்டால் எளிதாகக் கையாள முடியும். அதேநேரம் அந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் விமான போக்குவரத்து இரு ஏர்போர்டுகளுக்கு இடையே எப்படிப் பிரித்துக் கொள்ளப்படும் என்றும் இப்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

செல்லும் நேரம்
பர்ந்தூர் விமான நிலையம் அமையும் போது, அங்குச் செல்ல 1.54 மணி நேரம் ஆகும் என மதிப்பிடப்படுகிறது. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இந்த விமான நிலையம் அமையும் என்பதால் இருக்கும் சாலை கட்டமைப்பை மேம்படுத்தினால் போதும். அதேபோல மெட்ரோ சேவையையும் கூட பரந்தூர் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் விமான நிலையம் செல்வோருக்குப் பெரியளவில் உதவும்.

இந்தியாவில் முதல்முறை
இந்தியாவில் வேறு எந்த நகரிலும் இரு விமான நிலையங்கள் இல்லை. எனவே இதை ஒப்பீட்டு சொல்வது கடினம். அதேநேரம் இரு விமான நிலையங்கள் இருக்கும்போது, நகருக்கு வெளியே உள்ள ஏர்போர்டிற்கு கட்டணம் குறைவாகவே இருக்கும். அதாவது சென்னைக்கான விமான கட்டணமும் குறைய வாய்ப்புகள் உள்ளன. சில சிக்கல்கள் இருந்தாலும் கூட, இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications