கூட்டணி தர்மத்தை காற்றில் பறக்கவிட்ட திமுக போட்டி வேட்பாளர்கள்.. ஸ்டாலின் அவசர ஆலோசனை
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து திமுகவில் பல உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளன. பல வேட்பாளர்களை எதிர்த்து போட்டியாக மனு தாக்கல் செய்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் சில வேட்பாளர்கள். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினர் போட்டியாக மனு தாக்கல் செய்து வென்றுள்ளதால் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர். கூட்டணி தர்மத்தை மீறிய திமுகவினர் மீது தலைவர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2ஆம் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர்களையும் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர்களையும் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
காலை முதலே மறைமுகத் தேர்தல் பரபரப்பாகவே நடைபெற்றது. கூட்டணி கட்சியினருக்கு அறிவித்த பல பகுதிகளில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கட்சித்தலைமையின் அறிவிப்பை மீறி கட்டுப்பாட்டை மீறி கூட்டணி தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

விசிக வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தின் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஜெயம்கொண்டம் நகராட்சித் தலைவர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர், திண்டிவனம் ,பெரியகுளம் ,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் துணைத்தலைவர் , பெண்ணாடம்,காடையாம்பட்டி ,மல்லாபுரம் ஆகியவற்றின் பேரூராட்சி தலைவர், கடத்தூர், திருப்போரூர் ,புவனகிரி ,கொளத்தூர் ,அனுமந்தன்பட்டி, ஓவேலி ஆகிய பகுதிகளில் துணைத்தலைவர் பதவி இடங்கள் விசிகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

கடலூர் நெல்லிக்குப்பம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு அதிரடி திருப்பமாக திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறனை எதிர்த்து திமுகவின் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திமுக வேட்பாளருக்கு 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன . 3 செல்லா வாக்குகளாக பதிவான நிலையில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார்.

தர்மபுரி பொ.மல்லபுரம்
இதேபோல தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பதவிக்கு விசிக சின்னவேடி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கூறி பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

தேனியில் காங்கிரஸ் கட்சி
தேனி அல்லிநகரம் நகராட்சித்தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது முன்மொழிய காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மட்டுமே இருந்தார். வழிமொழிய திமுகவினர் யாரும் முன்வரவில்லை. மேலும் திமுக வின் சார்பில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் ரேணுபிரியா அவர்கள் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சற்குணம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். மீண்டும் அவர் மனுத் தாக்கல் செய்யச் சென்றபோது நேரம் முடிந்து விட்ட காரணத்தினால் இவரின் மனுவினை தேர்தல் அலுவலர் நிராகரித்து விட்டார். கட்சித் தலைமை காங்கிரசுக்கு ஒதுக்கியும் அவர்களை எதிர்த்து திமுக போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சியினர். நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுக சார்பில் ரேணுப்பிரியா பாலமுருகன் அவர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்து இருந்தமையால் நகராட்சி தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்ற 7 வேட்பாளர்களும் தேர்தலை புறக்கணித்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தோல்வி
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட சாந்தி சதீஷ் குமார் 11 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். மொத்தம் 15 வாக்குகளில் செல்வமேரி அருள்ராஜ் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் திமுகவினர் தங்களுக்கு துரோம் செய்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை கருமத்தப்பட்டி
கருமத்தப்பட்டி நகராட்சித்தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். திமுக கவுன்சிலர்கள் எல்லோரும் திமுகவிற்கே ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

திருமுருகன் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்
திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியத்தை திமுக வேட்பாளர் குமார் தோற்கடித்தார். கூட்டணிக்கு திமுகவினர் துரோகம் செய்து விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதேபோல் பல நகராட்சிகளில் கூட்டணி வேட்பாளர்களை திமுகவினர் தோற்கடித்தனர் .

சாட்டை சுழற்றுவாரா ஸ்டாலின்
கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூட்டணி கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமையின் அறிவிப்பை மீறி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பாராட்டு கிடைக்குமா? நடவடிக்கை பாயுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியும்.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications