உலக சிறுநீரக தினம்: சிறுநீரக செயல் இழப்பின் அறிகுறிகள் பாதுகாப்பு முறைகள் - மருத்துவர்கள் ஆலோசனை
உலக சிறுநீரக தினம் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. "சிறுநீரக நோய் இருப்பினும் நன்றாக வாழ்வது” என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
சென்னை: உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 11ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சிறுநீரக தினம்( World Kidney Day 2021) அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டு "சிறுநீரக நோய் இருப்பினும் நன்றாக வாழ்வது" என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறுநீரகத்தின் அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நம் உடலில் மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வது எவ்வாறு என்றும் ஆண்டுதோறும் இந்நாளில் சிறுநீரக நிபுணர்களால் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டியில் உள்ள கிளானியஸ் இன்ஸ்டியூட் அளையிடு சயின்ஸ் கல்லூரியில் இன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டது. மாணவர்களும்,மருத்துவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்களுக்கு சிறுநீரக நோயின் அறிகுறிகள், நோய் பாதிப்பு ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் மாரியம்மாள் விளக்கம் அளித்தார்.

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள், ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலைகளை செய்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 400 முறைக்கும் மேல் இந்த வேலையை சிறுநீரகங்கள் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் அதிக ரத்த அழுத்தம், நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

திருமங்கலம் மலர் டயபடிக் கிளினிக் டாக்டர் எஸ் பாண்டியன் சர்க்கரை நோய் நிபுணர் சிறுநீராகத்தின் அவசியம் குறித்தும், சிறுநீராக நோயின் அறிகுறிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறது என்றால் அதன் அறிகுறியாக அதிக பசி, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் போகும் சூழ்நிலை ஏற்படும்.

அதே போல ஹைபர் டென்சன் உயர் ரத்த அழுத்தம் என்றால் அதீத வியர்வை, படபடப்பு ஏற்படும். அதே போல சிறுநீராக செயலிப்பு உள்ளது என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. கால்களில் வீக்கம் ஏற்படுவது, தூங்கி எழுந்தால் முகம் வீங்கியிருக்கும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கேற்ப சிறுநீர் போகிறதா என கவனிக்க வேண்டும்.
குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு நோய் இருக்கிறதா? உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று செக் செய்வது போல இதயம், சிறுநீரகங்களின் செயல்பாடுகள் பற்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் எஸ். பாண்டியன் தெரிவித்தார்.

ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
35 வயதிற்கு கீழ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீரகங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications