'தமிழ் வழியிலும் மருத்துவம் படிக்கலாம்!' - முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சிக்கு பெருகும் வரவேற்பு
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடநூல்கள் தமிழில் தயாராகி வருவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
'அதற்கான முன்முயற்சியாக முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாடப் புத்தகங்கள் தமிழில் தயாராகி வருகிறது' என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் 1835 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் (எம்.எம்.சி) தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே பழைமையான மூன்றாவது மருத்துவக் கல்லூரி இது. அப்படிப் பார்த்தால் 187 ஆண்டுகளாக சென்னையில் மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில மொழியில். கூடவே, 'சம்ஸ்கிருதம் கற்றால்தான் மருத்துவம் படிக்க முடியும்' என்ற நிலையும் நிலவியது.

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்
அறிவியல் உலகத்துக்கு நெருக்கமான மொழி ஆங்கிலம் என்பதால் இதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், சோதனை முயற்சியாகக்கூட நமது தாய்மொழியான தமிழில் மருத்துவம் கற்பிக்கப்படவில்லை என்பது துயரமான செய்தி இல்லையா?
அந்தத் துயரத்துக்கு விடிவு பிறந்திருக்கிறது. தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ்வழியில் மருத்துவம் படிப்பதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். இதற்குச் செயல்வடிவம் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனாலும், அதற்கான முதல் தொடக்கம் இப்போதாவது நடைமுறைக்கு வந்துள்ளதே என ஆறுதல் அடையலாம்.
தமிழில் மருத்துவப் பாடப்புத்தகங்களை உருவாக்குவது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், " மருத்துவ படிப்பில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான ஒப்புதல் கிடைத்ததும், சென்னையில் தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முயற்சி மேற்கொள்வோம்" என்கிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொடர்ந்து பேசிய அமைச்சர், "ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மூன்று பேராசிரியர்கள், கடந்த ஒருவருடமாக முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொழிபெயர்ப்புப் பணிகள் 100 சதவீதம் சரியாக உள்ளதா என மொழியியல் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம். குறைந்தது ஒரு மாதத்தில் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் முதலமைச்சர் பாடநூல்களை வெளியிடுவார்" என்றார்.
'இந்தியை மட்டும் எதிர்க்கிறார்கள். தமிழை வளர்க்க இவர்கள் ஆட்சியில் என்ன திட்டங்கள் செயல்வடிவம் பெற்றுள்ளன?' என்பவர்களுக்கு இந்த ஒரு அறிவிப்பே சரியான பதிலாக இருக்கும்.
'உயர்கல்வியில் இந்தி கட்டாயம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வரும் இதே காலகட்டத்தில்தான் மருத்துவ படிப்பைத் தமிழில் தரும் முயற்சியை திமுக அரசு மேற்கொண்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

புதிய முயற்சி
தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி குறித்து எலும்பு முடநீக்கியல் சிறப்பு மருத்துவர் சென் பாலாவிடம் பேசினோம். இவர் சமூக வலைத்தளங்களில் மருத்துவம் குறித்து பல்வேறு தகவல்களை எழுதி வருகிறார்.
"பத்தாம் வகுப்புவரை நான் அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில்தான் படித்தேன். அதன்பின் 12 வகுப்பை தனியார் பள்ளியில் படித்தேன். அதன்பின்னர், மருத்துவப் படிப்பில் சேர்ந்தபோது முழு பாடநூல்களும் ஆங்கிலத்திலேயே இருந்தன. அதுவரை தமிழை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட எனக்கு, மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் இருந்தது.
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறியவே பெரிய சிரமமாக இருந்த காலத்தில் ஒரு முழு வாக்கியத்துக்கும் அர்த்தம் அறிந்து கொள்வதற்குப் பல தடைகள் இருந்தன. 2004 ஆம் ஆண்டில் இன்றைக்கு உள்ளதைப் போல இணையதள வசதிகள் இல்லை.
ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேவை என்றால் அகராதியின் உதவி தேவை. எப்படியோ ஒரு சொல்லுக்கு அர்த்தம் படிப்போம். ஆனால், அதுவே வாக்கியமாக வந்தால் பெரிய சிக்கல்தான். அவ்வளவு எளிதாக மண்டைக்குள் ஏறாது.

மருத்துவர் சென் பாலா
நாங்கள் மருத்துவம் படித்த காலத்தில் 'பிரேக் சிஸ்டம்' என்ற ஒன்று இருந்தது. ஒரு பாடத்தில் தவறிவிட்டால் மீண்டும் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பையே மறுபடியும் தொடர வேண்டும். இப்போது அந்த முறையை நீக்கிவிட்டார்கள்.
மொத்தம் 150 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஐம்பது பேருக்கு நிகராக தமிழில் படித்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆங்கில வழியில் படிப்பதில் பிரச்னை இருந்தது. பாடத்துடன் சேர்த்து ஒரு மொழியையும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அந்த நிர்ப்பந்தம் அரசின் தமிழ் வழிக் கல்வியால் கொஞ்சம் உடைக்கப்படும்" என்கிறார்.
மேலும் அவர், "இன்றைய அறிவியல் உலகம் ஆங்கிலத்துடன் தொடர்புடையது. ஒரு மருத்துவராகத் தன்னை மேம்படுத்திக் கொள்ள ஆங்கிலம் அவசியம். பல ஆயிரம் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆங்கிலத்தில்தான் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதனை நாம் உடனடியாக படித்தறிய வேண்டி உள்ளது.
ஆகவே, தாய்மொழியுடன் மருத்துவம் கற்கும் மாணவர்கள் இடைவிடாமல் ஆங்கிலத்திலும் தன்னை மேம்படுத்திக் கொண்டே வர வேண்டும். அப்போதுதான் இந்த அறிவியல் உலகோடு அறிவுரீதியாக நாம் போட்டி போட முடியும் என்பது ஒரு மருத்துவராக நான் முன்வைக்கும் கருத்து" என்கிறார்.
சென் பாலா மருத்துவத்துறையைச் சேர்ந்தவர். ஆனால், தமிழ்க் கல்விப்புலத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் சிவக்குமார் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம்.
"பல ஆண்டுகளுக்கு முன்பே கலை அறிவியல் உயர்படிப்புகளை தமிழ்வழியில் கற்பதை அறிமுகப்படுத்தினார்கள். கல்வி அமைச்சராக சி.சுப்பிரமணியம் இருந்த காலத்தில் புதுமுக வகுப்பில் இதனைக் கொண்டுவந்தார்கள்.
அதற்குப்பின் திமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக நெடுஞ்செழியன் இருந்தபோது கலை அறிவியல் பட்ட வகுப்புகளுக்கான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், பொறியியல் படிப்புக்கான முயற்சிகள் அப்போது எடுக்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சியில்தான் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் கற்பிக்கும் முறை அறிமுகமானது. இப்போது, 'தமிழில் மருத்துவப் படிப்பு' என்பதில் ஒருபடி முன்னேறி இருக்கிறார்கள். இது முதல் முயற்சி.
ஆனால், இது ஆட்சி மாறும்போது தடைபட்டுவிடக் கூடாது. தொடர்ந்து கொண்டு செல்லப்பட வேண்டும். முன்பே மருத்துவத்துறைக்கான கலைச்சொற்கள் சில தனிநபர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் நிறைய சொற்களைத் தமிழில் உருவாக்க வேண்டி உள்ளது. அப்பணி நடந்து வருவதாக மா.சுப்பிரமணியம் கூறி இருக்கிறார். ஆனால், 'தனியாக உருவாக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் கற்பிக்கப்படும்' என்கிறார். ஆனால், அதை அனைத்து மருத்துவக் கல்லூரிக்கும் விரிவுபடுத்த வேண்டும். பாடங்கள் தரமாக எழுதப்பட வேண்டும்" என்கிறார்.
"தமிழ் வழியில் கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களைப் படிக்கலாம் என்ற சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி கொண்டுவந்தார். ஆங்கில வழியில் படிப்பவர்களும் தமிழில் தேர்வு எழுத அவர் வழிவகுத்தார். இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" என்கிறார், தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.
எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் மாணவர்கள் கற்கலாம். ஆனால் எந்தப் படிப்பும் தாய் மொழியிலும் வழங்கப்பட வேண்டும். அந்த முயற்சியில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications