சென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் அறைக்குள் புகுந்த இளம் பெண்.. அடுத்து என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் சென்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் இருக்கிறது. இந்த கோட்டையில் தான் தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் அதற்கு பக்கத்திலேயே அதாவது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எழிலகத்திலும் ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. அந்த வகையில் எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியாற்றுகிறார்கள்.. அங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் அறையில் புகுந்து இளம்பெண் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை எழிலகத்தில் தமிழக அரசின் மிக முக்கியமான பல துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.தமிழகத்தின் வருவாய்த் துறை தொடர்பான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கும் இடமாக எழிலகம் இருக்கிறது. அதேபோல் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு மையம் இங்குதான் உள்ளது. நில ஆவணங்கள் மற்றும் நிலப்பட்டா தொடர்பான உச்சபட்ச அலுவலகம் எழிலகத்தில் தான் அமைந்துள்ளது.

அதேபோல் தமிழக அரசின் வருவாய்க்குப் பெரிய பங்களிப்பை வழங்கும் வணிக வரித் துறையின் தலைமை அலுவலகம் இங்குள்ளது. முத்திரைத் தாள் மற்றும் சொத்து பதிவுகளை நிர்வகிக்கும் துறை, குடும்ப அட்டை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான தலைமை அலுவலகம், தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும் அது சார்ந்த நிர்வாக அலுவலகங்கள், நிலச்சீர்திருத்தத் துறை என பல்வேறு வகையான துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கு தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். பல்வேறு அரசு ஊழியர்கள் பணியாற்றும் இடம் எழிலகம் ஆகும்
சென்னை எழிலகம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். அங்கு உள்ள அரசு துறை ஒன்றில் உயர் அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொறுப்பில் உள்ளார். இவரை பார்க்க இளம்பெண் ஒருவர் கடந்த மே 12ம் தேதி வந்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அறைக்குள் சென்று அவருடன் அந்த இளம்பெண் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் இருவரும் காரசாரமாக சத்தம்போட்டு பேசினார்கள். விவாதம் உச்சக்கட்டமான நிலையில் அந்த இளம்பெண்ணை ஐ.ஏ.எஸ். அதிகாரி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த இளம்பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அறை வாசலில் அமர்ந்து கூச்சல்போட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை சமாதானப்படுத்தி போலீசார் அழைத்து சென்றார்கள். நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அந்த இளம்பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர். கணவரை பிரிந்து வாழும் அவரிடம் குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி நெருக்கமாக பழகி வந்ததாக சொன்னார். இதையொட்டிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும், இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கும்படி அறிவுரை வழங்கி, அந்த இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக இளம்பெண் மீது குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெண் உதவியாளர் சென்னை அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications