அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டு தவறு செய்துவிட்டதா பாஜக?
கோவை: கோவை கொடீசியா வளாகத்தில் கடந்த உரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், நேற்று மாலையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருப்பது பாஜகவுக்குத்தான் பாதகமாக முடியும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆலோசனை நடத்தினார். தொழில் துறையினருக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் தொழில் முனைவோருடன் நேரடியாக விவாதித்தார். . ஒவ்வொரு தொழில் முனைவோர் அமைப்புகளும் தங்கள் துறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.

பின்னர் தொழில்துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்ததுடன் நிர்மலா சீதாராமனை விமர்சித்தனர். இந்த வீடியோ தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நேற்று நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கோவை ஓட்டல் உரிமையாளர் தங்களுடைய பிரச்னையை ஜனரஞ்சகமாகப் பேசியிருந்தார். அதில் தவறு இல்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், மாநிலங்களிலிருந்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். எனவே ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களிடம் இந்த பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஜி.எஸ்.டி-யை பரம விரோதியாகப் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் ஆதாயமாக இருக்கும்.
ஊறுகாய் மாமியை இப்படி எல்லாம் கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று விமர்சனங்கள் சொல்லலாம். இந்த விமர்சனங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஜி.எஸ்.டி வரியை மக்களுக்கு எந்த சுமையும் இல்லாமல், எளிமையாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில்தான் இறங்கியுள்ளோம்" என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதனிடையே கடுமையான விமர்சனங்கள் அதிகமான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் சந்தித்தார். இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் இருந்தனர். அப்போது, "நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று எழுந்து நின்று கை கூப்பி கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோவை பாஜகவினர் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த விளக்கத்தில் கோவை அன்னபூர்ணா சீனிவாசன் அவர்கள் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்களையும் சந்தித்து, கூட்டத்தில் தான் பேசிய பேச்சுக்கள் தவறாக ஊக்கப்படுத்தப்பட்டது குறித்தும் தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் சமூக வலைதளங்களில் கடும் எதிப்பு எழுந்துள்ளது. கோவை அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், தனிப்பட்ட முறையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை சந்தித்து மன்னிப்பு கேட்டதை எதற்காக வீடியோவாக எடுத்து பொதுவெளியில் விட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். முதலில் சீனிவாசன் மன்னிப்பு கேட்டதே தவறு என்று கூறும் நெட்டிசன்கள், அப்படியே மன்னிப்பு கேட்டிருந்தாலும், அந்த விஷயம் பொதுவெளிக்கு வந்திருக்க தேவையில்லை என்றும், இது வெளியானதால் தேவையின்றி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் தான் கெட்டபெயர் வரும் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் இந்த வீடியோவை பொதுவெளியில் விட்டதன் மூலம் சொல்ல வருவது என்ன என்று கேட்கும் நெட்டிசன்கள், ஜிஎஸ்டி குறித்து யாரும் இனி கேள்வி கேட்கக்கூடாதா என்றும் கேட்டால் இதுதான் நிலை என்பதை உணர்த்துவதற்காக வீடியோ வெளியிடப்பட்டதா என்றும் சில நெட்டிசன்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
ஜிஎஸ்டி குறித்த தனது கருத்துக்காக ஒரு தொழிலதிபர் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம் எந்த அளவிறகு ஆபத்தில் உள்ளது பாருங்கள்.. இந்த வீடியோ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரிந்து தான் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதா என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications