அரசியலில் இருந்தே விலகல! ’திராவிட’ பாரம்பரியத்தை விட மாட்டேன்! கோவை செல்வராஜ் அதிரடி! அந்த கட்சியா?
கோவை : ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் தான் விலகி இருப்பதாக கூறி இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் எனவும் விரைவில் நல்ல அறிவிப்பு ஒன்று வரும் எனக் கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்ததோடு, கோவையில் எஸ்பி வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகக் கடுமையாம விமர்சித்தார்.
எடப்பாடி தரப்பில் எப்படி ஜெயக்குமாரோ அதே போல ஓபிஎஸ் தரப்பில் செய்தி தொடர்பாளர் போலவே கோவை செல்வராஜ் இருந்தார். குறிப்பாக எடப்பாடி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரை மிக கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஓபிஎஸ்-சின் தளபதி போல இருந்தாரே கோவை செல்வராஜ்.. அவருக்கு சப்போர்ட்டா என்னவெல்லாம் பேசினார் தெரியுமா

கோவை செல்வராஜ்
இந்த நிலையில் தான் தற்போது அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ..பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார் கோவை செல்வராஜ்.

என்ன காரணம்?
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் தான் விலகி இருப்பதாக கூறி இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் எனவும் விரைவில் நல்ல அறிவிப்பு ஒன்று வரும் எனக் கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள கோவை செல்வராஜ்," அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக மதித்தேன். அதன் காரணமாகவே நான் அதிமுகவில் இணைந்தேன். ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு மிக அதிகமாக இருந்தது.

முதல்வர் ஜெயலலிதா
ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு நேர்மையானவராகவும் விசுவாசமானவராகவும் இருப்பார் என்பதால் தான் அவருக்கு ஆதரவளித்து வந்தேன். ஆனால் அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தங்கள் பதவி தான் முக்கியம் என ஓ.பன்னீர்செல்வம் இருந்தார் என ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் தங்கள் பதவிக்காக ஜெயலலிதாவின் உயிரோடு விளையாடிவிட்டனர் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதவிக்கா சுயநலம்
தற்போது வரை பதவிக்காகவே இருவரும் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அதிமுகவில் அம்மாவின் உண்மையான விசுவாசியான என்னால் கட்சியில் தொடர முடியவில்லை. அதே நேரத்தில் அதிமுகவிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டும்தான் நான் விலகி இருக்கிறேன் அரசியலில் இருந்து இல்லை என்னால் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக முடியாது. விரைவில் நல்ல அறிவிப்பு ஒன்று வரும் அதுவரை பொறுத்திருங்கள். எனக் கூறியிருக்கிறார்.

வேறு கட்சியில்..?
இதன் மூலம் கோவை செல்வராஜ் விரைவில் வேறு கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் அவர் இணைவார் என கடந்த சில தினங்களாக யூகங்கள் பரவி வந்தது. மேலும் திமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவரின் முன்னிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவர் திமுகவில் இணையலாம் எனவும் இருவேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் என அவர் கூறியிருப்பதன் மூலம் திராவிட கட்சி ஒன்றிலேயே அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் கோவை செல்வராஜ் ஆதரவாளர்கள்.