எஸ்.பி வேலுமணி வீட்டு ரெய்டில் சிக்கிய சாவி : வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
கோவை: எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த குழு கணக்கு வைத்துள்ள வங்கியில் சோதனை நடத்தியுள்ளனர். வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

கடந்த மார்ச் மாதம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல ஊழல்களை செய்துள்ளார். அதில் ஒரு ஊழலை பார்க்க போகிறோம். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மே 2014ல் அமைச்சரான பிறகு கோவை மாநகராட்சியில் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து, தன்னுடைய சகோதரர் அன்பரசனின் நிறுவனமான செந்தில் அன்கோவிற்கு எப்படி டெண்டர்களை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
செந்தில் அன்கோ என்னும் நிறுவனம், ராஜன் ரத்தினசாமி என்ற நபரும், அதாவது இந்த 2 பேரும் மட்டுமே பங்கு பெற்று கிட்டத்தட்ட 47 டெண்டர்களில் போட்டி போடுகிறார்கள். இவர்கள் மட்டும் டெண்டர்களை எடுத்து கொள்கிறார்கள். 2014 முதல் 2017 வரை இது நடக்கிறது. இந்த ராஜன் ரத்தினசாமி என்ற நபர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செந்தில் அன்கோ என்ற நிறுவனத்திலேயே வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் 47 டெண்டர்களில் அடுத்தடுத்து டெண்டர் அப்லோடு செய்துள்ளனர். இந்த டெண்டர்களில் சில ரேண்டமான டெண்டர்களை எடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனுப்பி இது குறித்து கேட்டோம். அதில் அனைத்து டெண்டர்களும் ஒரே ஐபி அட்ரஸில் இருந்து அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதும் அவரது சகோதரர் அன்பரசன், உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுகவின் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். கேசிபி என்ஜினியர் பிரைவேட் லிமிடெட், கேசிபி இன்ப்ரா லிமிடெட், ஸ்ரீமகாகணபதி ஜூவல்லர்ஸ், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ், எசிஇ டெக் மெசினரி, ஆலாம் கோல்ட் அன் டயமன்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346.81 கோடி ரூபாய் மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார். தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998இன் கீழ் இது தவறு. 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டெண்டர் ரூல் படியும் தவறு. இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை பதிவு செய்த அந்த முதல் தகவல் அறிக்கையில் , முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் பெயர் ஏ1 என்று முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் வங்கி லாக்கர் சாவி மட்டுமே கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்த வங்கி லாக்கர் சாவியை வைத்து, அதிகாரிகள் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து பார்த்துள்ளனர்.
புதன்கிழமை அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள எஸ் பி. வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிட்டுள்ளனர். அதன் பின்னர் வங்கியின் மேலாளரிடம், வங்கியின் லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்றும் விசாரணை மேற்கொண்டனர். வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கி லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றனவா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications