உதயநிதி அமைச்சராகிட்டார்ல.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது இனி நடக்கும்.. அண்ணாமலை சொன்ன ஃப்ளாஷ்பேக்!
கோவை : உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிவிட்டார், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மகன் அமைச்சரானதும் என்ன ஆனது என்று பாருங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிராவில் அமைச்சரான நிலையில், இரண்டரை ஆண்டுகளில் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணி உருவாகி, உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி அணியான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு, பாஜக ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கியுள்ளது. சிவசேனாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜகவே உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது.
மகாராஷ்டிரா ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசியலோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

இயேசுநாதர் போல வர முடியாது
இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் மெகா பட்டய கணக்காளர் மாணவர் மாநாடு, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாடே உங்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஹீமேன் போல பறந்தோ, இயேசுநாதர் போல தண்ணீரில் நடந்திடவோ முடியாது. தோல்வியில் விழுந்து எழுந்து தான் வர முடியும். உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை மறந்துவிடாதீர்கள். தோல்வியில்லாமல் வெற்றி அமைந்ததாக சரித்திரம் இல்லை என்று பேசினார்.

திமுகவில் பொருளாதார நிபுணர்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்தனர். முழுவதுமாக பொருளாதார நிலைமை தெரிந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். திமுகவில் பொருளாதார நிபுணர்கள் இருக்கின்றார்கள். சிலர் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் என சொல்கிறார்கள். சொன்னதை ஏன் செய்யவில்லை என்பது தான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக சொல்லவில்லை, ஆனால் செய்தார்கள். உத்தர பிரதேசம், புதுச்சேரியில் எவ்வளவு குறைத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

குண்டுச் சட்டிக்குள்
2014இல் பாஜக ஆட்சிக்கு வரும்போது 67% கேஸ் பயன்படுத்தி வந்தனர். இன்று 99.3% பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். கேஸ் பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நம்மிடம் கேஸ் இல்லை, இறக்குமதி தான் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கு கேஸ் பெட்ரோல் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ, அங்கு வாங்குவோம். அமெரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்துப் பார்க்கையில் விலை எவ்வளவு உள்ளது என்று ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். பேப்பர் படிப்பதில்லை,, உலகில் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாமல் குண்டுச்சட்டிக்குள் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

பொய் சொல்லவே கோவை வருகிறார்கள்
மின்சாரத்தில் மத்திய அரசு விலை ஏற்றியதாக ஒரு லெட்டர் காட்டுங்கள். காற்றாலை, சூரிய மின்சாரம் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள், நஷ்டத்திற்கு காரணம் என்ன? ஒரு மெகா வாட்டுக்கு, திருப்பூரில் 20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு 10 லட்சம் வாங்குகின்றனர். தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்மாக சொல்லியுள்ளது 3500 மெகாவாட் போடுவோம் என, ஆனால் 300 மெகாவாட் கூட இல்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். பொய் சொல்லவே சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர்.

காங்கிரஸ் ஃபிட்
ராகுல் காந்தி நடைபயணம் மக்களுக்கு பொழுதுபோக்கு. காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டால் வலது இடது என தனக்கருகில் நிறுத்திக் கொள்கிறார். நடை பயணத்தின் முடிவை நாம் தேர்தல் மூலம் பார்க்கிறோம். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறார். அவரை ஃபிட்டாக வைத்துக்கொள்ள இந்த நடைபயணம் உதவுகிறது. உடற்பயிற்சியாக அமைந்துள்ளது. கூடச் செல்லும் காங்கிரஸ்காரர்களும் ஃபிட் ஆக உள்ளனர். ஆனால், மக்களுக்கு பயனில்லை.

பொய் தொகுப்பு
83 கோடி மக்கள் மத்திய அரசின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில் பயன் அடைகின்றனர். இதையாவது தமிழக அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் வேண்டுகோள். போன வருடம் பொங்கலுக்கு கருப்பு கொடுத்தீர்கள்.. இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. பனைவெல்லத்தை ஆரம்பிக்கிறோம் என்றீர்கள்.. அதை பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றீர்கள். ஆனால், இந்த ஆட்சியில் ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

உத்தவ் தாக்கரே - உதயநிதி
மக்கள் 2024இல் திமுகவிற்கு முடிவுரை எழுதுவார்கள். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மகன் அமைச்சராகியதும் என்ன ஆனது என்று பார்த்தீர்கள்.. இங்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிவிட்டார்.. இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" எனப் பேசினார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தனி அணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியதைக் குறிப்பிட்டு, திமுகவிலும் அந்த நிலை ஏற்படும் என சூசகமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications