கோத்தபாய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புகிறார்- அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன
கொழும்பு: சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் மக்களது ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கை நிர்மூலமாகிவிட்டது.

இதனையடுத்து பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண வலியுறுத்தி இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்கள் கிளர்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் பதவியை விட்டு மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனாலும் மக்கள் போராட்டம் தொடர்ந்ததால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தார்.
இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, தொடக்கத்தில் மாலத்தீவு போனார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தஞ்சமடைந்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளார் கோத்தபாய என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தீவிரம் காட்டி வருகிறார். கோத்தபாய ராஜினாமாவை தொடர்ந்து நாடாளுமன்ற எம்.பி.க்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரணில். ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வந்த மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டார் ரணில்.
இதனால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக இலங்கையில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இச்சூழலில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்த்தன உரையாடினார். அப்போது, சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்சே, விரைவில் இலங்கைக்கு திரும்புவார் என்றார்.
ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக சிங்கப்பூரிலேயே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பலரும் கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பின் வழக்கறிஞர்களும் சிங்கப்பூர் அரசிடம் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய கோரி வருகின்றனர். இதனால் சிங்கப்பூரில் கோத்தபாய ராஜபக்சே நீண்டகாலம் பதுங்க முடியாத நிலை உள்ளது. அதனாலேயே வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே திரும்ப கோத்தபாய விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications