வேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்!
கடலூர்: பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்த செயல் மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் விறுவிறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வாக்குகளை சேகரிக்க பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரப்பாளையம் அண்ணா சிலை அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
சுமார் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டு கனிமொழியின் பிரசாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
இதை கவனித்த கனிமொழி எம்.பி. உடனடியாக தனது பிரசாரத்தை நிறுத்தினார். இதனை தொடந்து ''ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள்'' என்று கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார். ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வசதியாக மக்களை ஒழுங்குபடுத்தினார் கனிமொழி. இதனையடுத்து எந்த ஒரு தடையுமின்றி ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு இருந்து சென்றது.
ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழியின் இந்த செயல் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.