தேர்தல் பிரச்சாரங்களில்.. 'மோடி பெயரை மறந்தும் உச்சரிக்காத கெஜ்ரிவால்..' திடீரென என்னாச்சு?
டெல்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு முறை கூட பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மாநிலக் கட்சிகளைத்தாண்டி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் தங்கள் பலத்தை நிரூபித்து வருகின்றன. அதேவேளையில், யாரும் எதிர்பார்க்காதவகையில் டெல்லியில் பலம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டசபைத் தேர்தலில் களம்கண்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் போட்டிப்போடுகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டி கொடுக்கும் விதமாக ஆம் ஆத்மி செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால்
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் சுழன்று சுழன்று பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசி தன்னுடைய பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார். கோவா மாநிலத்திலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கணிசமாக செல்வாக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.

மோடியை சீண்டாத கெஜ்ரிவால்
கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி, இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து பிரசாரத்தைத் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், இதுவரை 4 மாநிலங்களில் 38 இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். அதில் இரண்டு பத்திரிக்கையாளர் சந்திப்புகளைத் தவிர, வேறு எந்த இடத்திலும் மறந்தும்கூட பிரதமர் மோடி குறித்து பேசவோ, விமர்சனமோ அரவிந்த் கெஜ்ரிவால் கூறவில்லை.

பிரசாரங்கள்
பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'சோட்டா மோடி' என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியை தவிர்த்துவிட்டார் கெஜ்ரிவால். மோடி குறித்த மற்றொரு கேள்விக்கு, அது பழைய விஷயம் என நாசூக்காக தவிர்த்துவிட்டார். இந்த தேர்தல் பிரசாரம் மட்டும் இல்லாமல், கடந்த 32 மாதங்களாக மோடி பெயரை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

என்ன ஆச்சு
கடந்த காலங்களில் , ''சர்வாதிகாரி, மனிதாபிமானமற்றவர், டெல்லிக்கு ஆபத்தானவர்'' என பிரதமர் மோடியை சகட்டுமேனிக்கு விமர்சித்தவர் தான் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால். ஆனால் சமீப நாட்களாக பிரதமர் மோடி குறித்து மறந்தும் வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரவிந்த் கெஜ்ரிவால் மீது வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார் கெஜ்ரிவால்.

பல நாட்களுக்குபின்
இந்நிலையில் தான், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்லலாம், அதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என டெல்லி அரசு கூறியதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த கெஜ்ரிவால், பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என காட்டமாக தன்னுடைய ட்விட்டரில் பதிலளித்தார். பல மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி பெயரை நேற்றுதான் கெஜ்ரிவால் உச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
