"ஊடகங்களை பாஜக மிரட்டுகிறது.. ஆம் ஆத்மி வளர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை" அரவிந்த் கெஜ்ரிவால் பரபர!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று பிரதமர் மோடியின் ஆலோசகர் ஹிரேன் ஜோசி மிரட்டுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
நடப்பாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் 27 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக ஆம் ஆத்மி தரப்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பணியாற்றி வருகிறார். இவரது வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை, இலவச மின்சாரன், இளைஞர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி மாநாடு
இதன் காரணமாக பாஜக தரப்பில் இலவசங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் என ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆம் ஆத்மி மீது பொய் வழக்கு
இந்த மாநாட்டுல் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், குஜராத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பாஜக முயற்சிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பொய்யான ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிக்கிறது. அதன் காரணமாகவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டுகள் நடத்தப்படுகிறது.

பாஜக மீது விமர்சனம்
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில் விரைவில் வர உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாஜக மிகவும் அச்சத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு மிரட்டல்
இதனைத்தொடர்ந்து குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று பல தொலைக்காட்சி ஊடகங்களின் உரிமையாளர்களை பிரதமரின் ஆலோசகர் ஹிரேன் ஜோஷி எச்சரித்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் இதுபோல் ஊடகங்களை மிரட்டுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமரின் ஆலோசகரான ஹிரேன் ஜோஷி அனுப்பிய குறுஞ்செய்திகளை செய்தி சேனல் உரிமையாளர்கள் பகிர்ந்து கொண்டால், பிரதமர் மற்றும் ஹிரேன் ஜோஷி இருவரும் தங்கள் முகத்தை நாட்டிற்குக் காட்ட முடியாது என்று தெரிவித்தார்.

இலவசங்கள்
அதேபோல் இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்வதாக பாஜக விமர்சித்து வருகிறது. ஆனால் நேர்வையற்ற நிர்வாகி, ஊழல்வாதிகள் உள்ளிட்டோர் மட்டுமே இலவசங்கள் நாட்டுக்கு சரியானதல்ல என்று கூறுவார்கள். இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் என்றால், அவரின் நோக்கம் தவறானது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications