மங்கி பாக்ஸ்! ஏர்போர்டில் டெஸ்டிங் .. உறுதி ஆனால் என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசு வழிகாட்டுதல்கள்
டெல்லி: உலக நாடுகளில்ல மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் நிலையில், இப்போது அடுத்த தலைவலியாக மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. இது எங்கு அடுத்த பெருந்தொற்றாக பரவுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் எண்டமிக் நோயாக இருந்த வைரஸ், இப்போது மற்ற நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ்
இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், எங்கு இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசு மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் நோய் பரவும் முறை, பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், டெஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்
இந்த நோய்ப் பாதிப்பு பெரிதளவில் பரவாமல் இருக்கக் கண்காணிப்பு நடவடிக்கையும் புதிய வழக்கை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் உடன் தொடர்பில் இருந்தவரை அடுத்த 21 நாட்களுக்குத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த நோய்ப் பாதிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்யக் கூடாது
நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கக் கூடாது. நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் போது பிபிஇ கிட்களை அணிந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் இவ்வளவு வேகமாகப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணத்தை ஆய்வாளர்களும் உறுதியாகக் கூற முடியவில்லை. இருப்பினும், இப்போது வரை அச்சப்படத் தேவையில்லை என்றே அவர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

தடுப்பது எப்படி
முதலில் நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது. அறிகுறி உள்ளவருடன் தொடர்பு ஏற்பட்டால்,கைகளை நன்கு கழுவ வேண்டும். நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் போது மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவை அதில் கூறப்பட்டுள்ளது.

டெஸ்டிங் மற்றும் அறிகுறி
பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனை மூலம் ஒருவருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறியலாம். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்புவோருக்குக் கொப்புகள் இருந்தால் சோதனை செய்ய வேண்டும். வீங்கிய நிணநீர் கணுக்கள், காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், பலவீனமாக உணர்வது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் டெஸ்டிங் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications