28 ஆண்டு கனவு.. சாத்தியமாகுமா பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு? மத்திய அரசு கொண்டு வரும் மசோதா! செமமூவ்
டெல்லி: 28 ஆண்டு காலமாக நிலுவையில் இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசேதாவை வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் மசோதா கடந்த வந்த பாதை குறித்த விபரமும், இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்களும் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் மத்திய அரசு சார்பில் நேற்று வெளிவந்த ஒரு அறிவிப்பு என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. அதாவது முன்கூட்டியே இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதா?, இந்தியாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறை அமலுக்கு வருகிறதா? என பல்வேறு கேள்விகள் உருவாகி உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் என்பது நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய இந்த தகவல் தான். அதாவது செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என அவர் அறிவித்தது. கடந்த மாதம் 11ம் தேதி தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் உடனடியாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன்? என்ற கேள்விகள் அனைவரின் மனதில் எழுந்தது.
அப்போது தான் புதிய தகவல் வெளியானது. அதாவது இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் விவகாரம் என கூறப்படுகிறது. அதோடு மத்திய அரசு சார்பில் பல மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படலாம். குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது சட்டமாக்கப்பட்டு நாட்டில் ஒரே நேரத்தில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாக நடக்கும். பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் அதுவும் இந்தியாவில் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். அதேபோல் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா என்பது பெண்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை அம்சமாக கொண்டது. இந்த மசோதா என்பது 28 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில் இதனை நிறைவேற்றம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்ய உள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெண்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டமாக்கப்படும். தற்போது கொண்டு வரப்படும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா முதல் முதலில் 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதர் தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அந்த மசோதாவுக்கு இருசபைகளிலும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டு குழுவில் ஒப்புதல் பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால் லோக்சபா திடீரென்று கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியானது. இதையடுத்து 1998 ல் மறைந்த பிரதமர் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மீண்டும் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த தமிழகத்தை சேர்ந்த எம் தம்பித்துரை இதனை அறிமுகம் செய்தார்.
இந்த வேளையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் எம்பி ஒருவர் மசோதாவை கிழித்து கிணற்றில் வீசினார். இதையடுத்து அப்போதும் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன்பிறகு இந்த மசோதா 1999, 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற சபைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் மசோதாவை நிறைவேற்றம் செய்வதற்கான பெரும்பான்மை என்பது இருசபைகளிலும் கிடைக்காத நிலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தொடர்ந்து கிடப்பில் உள்ளது.
இப்படி கடந்த 28 ஆண்டுகளாக பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசேதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சோனியா காந்தி 2 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி கேட்டு இருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த மசோதா வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசேதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் பெண்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இது விரைவில் நடக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாசிட்டிவாக அமையலாம் எனவும் பாஜக கணக்கீட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள பல கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவாக உள்ளன. இதனால் அங்கு குழப்பம் ஏற்படலாம். இதுவும் பாஜகவுக்கு அரசியல் மைலேஜ் கொடுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications