பிரதமர் மோடி மோசமாக பேசி வருகிறார்.. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி பரபர புகார்!
டெல்லி: பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது, நீட், க்யூட் போன்ற தேர்வுகளை நடத்துவது மாநில அரசுகளின் விருப்பத்துக்கு உட்பட்டது, ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.
மேலும், பி.எம். கேர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய், காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும், கல்விக்கடன் , விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த தேர்தல் அறிக்கையை பாஜக விமர்சித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் அறிக்கை போல உள்ளது, முஸ்லிம் லீக்கின் முத்திரையைத் தாங்கிய இந்த தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பதை, இடதுசாரிகள் கைப்பற்றி உள்ளனர்." என்று விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார். குறிப்பிட்ட இனம் சார்ந்த பரப்புரைகளில் ஈடுபடுகிறார்." என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், "நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications